நியூ மெக்ஸிகோவில் எப்போதும் கேட்கும் வினோத சத்தம்... டாவ்ஸ் ஹம் பற்றித் தெரியுமா? #TaosHum

எவ்வளவு பெரிய நகரமாக இருந்தாலும் இரவின் கட்டுப்பாட்டில் வரும்போது, பூச்சிகளின் சத்தத்தைத் தவிர ஒரு விதமான மயான அமைதியைப் பெற்று விடுவதும் இயல்புதான். ஆனால், நியூ மெக்ஸிகோவில் இருக்கும் டாவ்ஸ் நகர் இந்த விஷயத்தில் சற்றே வித்தியாசப்படுகிறது. இரவு பகல் பாராது அங்கு கிலியூட்டும் நிகழ்வு ஒன்று நிற்காமல் நடந்து வருகிறது. எப்போதும் ஒலிக்கும் அந்த 'ஹம்ம்ம்ம்ம்’ என்ற சத்தம். ‘டாவ்ஸ் ஹம்’ என்று அழைக்கப்படும் இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு வீரியம் கொண்டதாய் இருக்கிறது.

டாவ்ஸ் நகரம்

Photo Courtesy: Billy Hathorn

வட-மத்திய நியூ மெக்ஸிகோவில் உள்ள டாவ்ஸ் நகரம் ஜூலியா ராபர்ட்ஸ், டென்னிஸ் ஹாப்பர் போன்ற பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களை வழங்கிய பெருமை உடையது. விவரம் அறியாதவர்களுக்கு அது ஒரு சிறிய, நல்ல முறையில் கட்டமைக்கப்பட்ட, கலை சமூகம் வாழும் இடம். ஆனால், அங்கிருக்கும் இரண்டு சதவீத மக்களுக்கு அந்த இடம் ஒரு நரகம். அந்த ஒலி, இடைவிடாது ஒலிக்கும் அந்த ஒலி அவர்களுக்கு மட்டுமே கேட்கிறது. அச்சத்தில் ஆழ்த்திவிடுகிறது. இது ஒரு மன நோய் எனத் தொடங்கி, பூமியின் நிலா அதிர்வு, மிலிட்டரி ஆராய்ச்சிகள் நடக்கிறது என அடுக்கடுக்காகப் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. ஆனால், அங்கேயே நிரந்தரமாகக் குடியிருக்கும் பலரும் இது சாத்தானின் சத்தம் என்கிறார்கள். எது உண்மை, அறிவியல் ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன?

டாவ்ஸ் ஹம்மின் தன்மை

உடற்கூறியல் மற்றும் உடலியக்கவியல் பேராசிரியர் ஸ்டீவன் ஐயனூச்சில்லி இது குறித்து விளக்குகிறார். “டாவ்ஸ் நகரில் இருக்கும் இரண்டு சதவீத மக்களுக்கு மட்டும் கேட்கிறது இந்த வினோத சத்தம். இந்த விசித்திர ஹம்ம்ம்ம் சத்தம் அல்லது சலலப்பு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. தலைக்குள் ரீங்காரம் இடும் இது தலைவலி தொடங்கி, பதற்றம், அச்சம் எனப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது எங்கிருந்து ஒலிக்கிறது, எது இந்தச் சத்தத்தை ஏற்படுத்துகிறது என்பது மர்மமாகவே உள்ளது. இரவு பகல் பாராமல், இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பாதிப்புகளை இந்த ஒலி ஏற்படுத்தி வருகிறது.”

உடல் அல்லது மனதின் பாதிப்பா?

இதற்கிடையில் முதலில் இது காதில் ஏற்படும் ஒருவகை பாதிப்பால் கேட்கிறது என நினைக்கப்பட்டது. மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் சத்தம்போல இருக்கும் இது ஒரு வித உடல் குறைபாடுதான் என்று அழைக்கப்பட மிக முக்கிய காரணம், இது ஒரு சாரருக்கு மட்டுமே கேட்கின்றது என்பதுதான். இந்த ஒலியும் ஒரேவகையைச் சார்ந்ததாக இருந்தாலும் ஒருவருக்கு அதிகமாகவும் மற்றொருவருக்கு குறைவாகவும் கேட்பதாக அறியப்பட்டது. அதாவது, ஒரு சிலருக்கு இது ஒரு பொருட்டே இல்லை, ஒரு சிலருக்கு இது கொடூரமான தண்டனை! இது குழப்பத்தை ஏற்படுத்தியது. நோய் என்றால் ஒலியின் அளவும் மாறுபடுமா என்ன?

டாவ்ஸ் நகரம்

Photo Courtesy: Bobak Ha'Eri

பேராசிரியர் ஸ்டீவன் அவர்களின் கருத்துபடி, “இதன் தன்மை மாறுபட்டாலும், ரீங்காரம் இடைவெளி இல்லாமல் எல்லோருக்கும் கேட்கிறது. ஒரு சிலரை தற்கொலைக்குக்கூட தூண்டியுள்ளது இந்த ‘டாவ்ஸ் ஹம்’. சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அந்தப் பிராந்தியத்தில் நிகழும் நில அதிர்வு மாற்றங்களால் இருக்கலாம். கான்ஸ்பிரசி தியரி பேசுபவர்கள், இது குறைந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகள் எனவும் அமெரிக்க மிலிட்டரி ஆராய்ச்சிகளால் இந்தத் தவறு நிகழ்கிறது எனவும் கூறுகின்றனர். ஒலியை ஆயத்தமாகப் பயன்படுத்துவது நிறைய முறை நிகழ்ந்துள்ளது எனவும் சுற்றி இருக்கும் பாலைவனத்தில் யாரும் நுழைய முடியாத இடத்தில் இவ்வகை ஆராய்ச்சிகள் நடக்கின்றன எனவும் எச்சரிக்கின்றனர்.

மக்களின் நம்பிக்கை என்ன?

இது இப்படியிருக்க அங்கு இருக்கும் வயதானவர்கள் வேறு கதை சொல்கின்றனர். நவாஜோ (Navajo) அப்பாச்சீ (Apache) மற்றும் ஹோப்பி (Hopi) போன்ற மூதாதையர்களின் கைங்கரியம் என்கின்றனர். அதாவது, இது இறந்தவர்களின் குரல்கள் எனவும், மரணித்ததால், அந்தப் புறத்தில் இருந்து நம்மை அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள் எனவும் நம்புகிறார்கள். மற்றொரு குழுவின் கூற்றுபடி, தொன்மையான அமெரிக்கர்கள் வாழ்ந்த பகுதி இந்த நியூ மெக்ஸிகோ. அவர்களின் கலாசாரபடி, இது பூமி நம்முடன் பேசும் நிகழ்வு என்று நம்புகிறார்கள். ஆனால், இந்த ஒலி நின்றபாடில்லை. அங்கு இருந்தவர்கள் இதற்குப் பயந்தே இடம்பெயர வேண்டிய சூழல்கூட ஏற்பட்டுள்ளது. இன்றும் அந்த ஒலி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எங்கேயோ ஏதோ ஒரு மூலையிலிருந்து யாருக்கும் புலப்படாத ஒரு செயல்முறையில் தன் பணியைச் செய்துகொண்டுதான் வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!