ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரியில் இடம்பெற்ற தமிழ்ச்சொல் ’அண்ணா’

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு சொல்லகராதியில் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த 70 வார்த்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் உள்ள சொற்கள் மற்றும் புதிதாக உருவாகும் சொற்களுக்கு விளக்கமளித்து, ஆக்ஸ்போர்டு சொல்லகராதியில் ஆண்டுதோறும்  சேர்க்கப்படுவது வழக்கம். அந்தவகையில், நடப்பாண்டில் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, உருது, மராத்தி ஆகிய மொழிகளைச் சேர்ந்த 70 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆக்ஸ்போர்டு சொல்லகராதியின் ஆசிரியர் டேனிகா சாலாஸர் கூறுகையில், இந்தியாவில் பேசப்படும் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் இந்திய மொழி வார்த்தைகளான தமிழில் மூத்த சகோதரரைக் குறிக்கும் அண்ணா (Anna), அச்சா (Achcha), பச்சா (Bachcha), சூரிய நமஸ்கார் (Surya Namaskar) உள்ளிட்ட வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு இந்தியா. அங்கு வசிக்கும் பல்வேறு இனக்குழு மக்கள் பேசும் மொழிகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், அதன் விளக்கங்களோடு ஆக்ஸ்போர்டு சொல்லகராதியில் ஒவ்வொரு முறையும் புதிதாக பதிவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களில் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ஆக்ஸ்போர்டு சொல்லகராதி வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த செப்டம்பர் மாத ஆக்ஸ்போர்டு சொல்லகராதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வார்த்தைகள், உணர்வுகள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. அணா (Anna) என்ற வார்த்தை ஒரு ரூபாயில் 16-ல் ஒரு பங்கு என்ற விளக்கத்துடன் பெயர்ச்சொல்லாக ஆக்ஸ்போர்டு சொல்லகராதியில் ஏற்கெனவே இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், மூத்த சகோதரரைக் குறிக்கும் வகையில் அண்ணா என்ற சொல் ஆக்ஸ்போர்ட் சொல்லகராதியின் செப்டம்பர் மாத பதிப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!