தனிநாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட காட்டலோனியா!

ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்று தனிநாடாகிவிட்டதாக காட்டலோனியா நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது.  

ஸ்பெயினின் தன்னாட்சிபெற்ற மாகாணமாக இருந்துவந்த காட்டலோனியாவில் தனிநாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பான்மையான மக்கள் காட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஆனால், இந்தப் பொதுவாக்கெடுப்பை ஸ்பெயின் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்தநிலையில், ஸ்பெயினிடமிருந்து விடுதலைபெற்று தனிநாடு உதயமானதாக காட்டலோனியாவின் பிரதமர் கார்லஸ் பியூக்டீமண்ட் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதை மற்ற நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கான தீர்மானமும் காட்டலோனிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.  

ஸ்பெயின் அரசியல் வரலாற்றின் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெரும் சிக்கல் காட்டலோனியா விவகாரத்தால் ஏற்பட்டுள்ளது. காட்டலோனிய நாடாளுமன்ற பிரகடனத்துக்குப் பின்னர் உடனடியாகக் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்படும் என்றும் கூறினார். காட்டலோனியாவின் தனிநாடு பிரகடனத்தை ஸ்பெயினோ அல்லது சர்வதேச சமூகமோ அங்கீகரிக்காது என்ற நிலையில் இது சம்பிரதாய அறிவிப்பாகவே இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!