வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (29/10/2017)

கடைசி தொடர்பு:10:28 (30/10/2017)

ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் 4 வயது பிரிட்டிஷ் இளவரசர்!

ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில், இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜின் பெயர் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஜார்ஜ் 

இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதியின் 4 வயது மகனான இளவரசர் ஜார்ஜ், 'கொல்லப்படுவார்' என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் சமூக வலைதளம்மூலம் மிரட்டியுள்ளதாக, இங்கிலாந்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ’ஸ்டார் ஆன் சண்டே’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இளவரசர் ஜார்ஜ் படிக்கும் பள்ளிக்கு அருகே அவர் நிற்பது போன்ற புகைப்படத்தை டெலிகிராம் மெசேஜிங் ஆப்-பில், ’பள்ளி சீக்கிரமே தொடங்கிவிட்டது’ என்ற தலைப்பில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த புகைப்படத்தில், ’துப்பாக்கித் தோட்டாக்கள் சூழ, போர் வரும்போது நம்பிக்கையுடன் பதிலடிகொடுப்போம்’ என்ற வாசகங்கள், அரபு மொழியிலும் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மத்திய லண்டன் பகுதியில் உள்ள கென்ஸிங்டன் அரண்மனையில், தனது குடும்பத்தினருடன் இளவரசர் ஜார்ஜ் வசித்துவருகிறார். வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள தாமஸ் பேட்டர்ஸீ பள்ளியில், தொடக்கக் கல்வி பயிலத் தொடங்கியிருக்கிறார். அவர் படித்துவரும் பள்ளியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை இங்கிலாந்து உளவுத்துறை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும். ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.