வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (31/10/2017)

கடைசி தொடர்பு:11:40 (31/10/2017)

நவாஸ் ஷெரீஃப் மகளுக்கு பதவியா? - மறுக்கும் முஸ்லிம் லீக் கட்சி

நவாஸ் ஷெரீஃபின் மகளுக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுக்கவிருப்பதாகப் பரவிய தகவலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மறுத்துள்ளது.

மரியம் நவாஸ்

பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீ ஃப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்துவருகிறது. உலகிலுள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்துவருவதாக, பனாமா லீக்ஸ் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. நவாஸ் ஷெரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகள் மற்றும் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதனால் நவாஸ், பிரதமர் பதவியை இழக்கும் அளவுக்கு விவகாரம் தீவிரமடைந்தது.

இதைத் தொடர்ந்து, நவாஸ் மீதான ஊழல் வழக்குகள், மூன்றாக அதிகரித்தது. இதனால், நவாஸ் தனது கட்சித் தலைவர் பதவியைக்கூட இழக்கும் அபாயம் ஏற்பட்டாலும், மீண்டும் தலைவராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால், வழக்கு விசாரணை முடிவு குறித்துத் தெரியாததால், அவர் பதவி இழக்கும் சூழலில், நவாஸின் மகள் மரியம் நவாஸ் அப்பதவியைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இதை உறுதிசெய்யும் வகையில், மரியமும் ஒரு பேட்டியில் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது, முஸ்லிம் லீக் கட்சி இந்தத் தகவலை மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தனக்கு ’கட்சியில் தொண்டராகப் பணியாற்றவே விருப்பம்; தலைவராக விருப்பமில்லை' என மரியமும் கருத்து வெளியிட்டுள்ளார்.