ஜார்ஜ் பபடோபோலோஸ்... அமெரிக்காவின் திண்டுக்கல் சீனிவாசன்! | George Papadopoulos pleaded guilty to lying to federal investigators

வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (31/10/2017)

கடைசி தொடர்பு:16:03 (31/10/2017)

ஜார்ஜ் பபடோபோலோஸ்... அமெரிக்காவின் திண்டுக்கல் சீனிவாசன்!

ஜார்ஜ் பபடோபோலோஸ்

அரசியல்வாதிகள் ஒன்றைக் கூறுவதும் அதனை, பின்னர் ‘இல்லை’ என்று மறுப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், தற்போது கொஞ்சம் ட்ரெண்டை மாற்றி... ‘‘அப்போது பொய் சொல்லிவிட்டேன். இப்போது அதற்காக வருந்துகிறேன்’’ என ஓப்பனாக ஸ்டேட்மென்ட் தருவது வழக்கமாகியுள்ளது. அதற்குச் சமீபத்திய உதாரணம், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ‘‘ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நாங்கள் யாரும் அவரைப் பார்க்கவில்லை. எங்களைச் சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும், சட்னி சாப்பிட்டதாகவும் பொய் சொன்னோம்’’ என அவர் சொல்லி மேடையில் மன்னிப்புக் கேட்டது அனைவரும் அறிந்ததே. இதே போன்றதொரு விஷயத்தைச் சொல்லி அமெரிக்காவில் வைரலாகியிருக்கிறார் அந்த நாட்டு அதிபர் ட்ரம்பின் பிரசார ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் பபடோபோலோஸ்.  

இவர், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அதிபர் வேட்பாளரான ட்ரம்புக்குப் பிரசார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். 2009-ம் ஆண்டு அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற இவர், கிரேக்க, துருக்கி மற்றும் சைப்ரைட் அரசியலில் அதீத நாட்டம் கொண்டவர். 2016-ம் ஆண்டு மே மாதம் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக ஜார்ஜ் பபடோபோலோஸ் நியமிக்கப்பட்டபோது... அவரை ட்ரம்ப், ‘Excellant Guy’ என்று குறிப்பிட்டார்.

ட்ரம்புக்குப் பிரசார ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மார்ச் 14, 2016 அன்று ஜார்ஜ் பபடோபோலோஸ் ஒரு ரஷ்யப் பேராசிரியருடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அந்த ரஷ்யப் பேராசிரியருக்கும் ரஷ்யப் பெண்மணி ஒருவருக்கும் தகவல் பரிமாற்றம் இருந்துள்ளது. அந்தப் பெண், ரஷ்ய அதிபரின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் மார்ச் 31-ம் தேதி ட்ரம்ப் மற்றும் புதின் இடையேயான சந்திப்பு ஏற்பாடு செய்வது குறித்துப் பேசியுள்ளார்.

ஜார்ஜ் பபடோபோலோஸ்

ரஷ்ய அதிகாரிகள் ட்ரம்புடனான புதினின் சந்திப்புக்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர் என்பது ஜார்ஜ் பபடோபோலோஸின் இ-மெயில் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இந்த ரஷ்ய உளவாளிகளைப் பயன்படுத்தி ஹிலரி கிளின்டன் தொடர்பான இ-மெயில்கள் வெளிவந்த விஷயத்திலும் முக்கியப் பங்காற்றியுள்ளார் பபடோபோலோஸ். இதற்கும் ரஷ்ய உளவாளிகள்தான் உதவியுள்ளனர். கிட்டத்தட்ட அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்ய அரசுக்கும் இடையே பாலமாக ஜார்ஜ் பபடோபோலோஸ் செயல்பட்டுள்ளார். அதேவேளையில், ட்ரம்பின் நம்பிக்கையான அதிகாரியாகவும் அவர் செயல்பட்டிருக்கிறார். 

அமெரிக்கத் தேர்தல் சமயத்தில் ரஷ்ய குறுக்கீடு இருந்தது என்ற குற்றச்சாட்டு இருந்துவந்தது. ஜனவரி மாதம் 2017-ல் நடந்த விசாரணையில்... ஜார்ஜ் பபடோபோலோஸ் எஃப்.பி.ஐ அதிகாரிகளிடம் இந்தச் சந்திப்பு குறித்த தவறான விஷயங்களைப் பொய்யாகக் கூறியுள்ளார். ஆனால், தற்போது நடைபெற்ற விசாரணையில்... ''எனக்கு சங்கடமாக உள்ளது. நான் எஃப்.பி.ஐ அதிகாரிகளிடம் பொய் கூறிவிட்டேன். ரஷ்ய அரசுடன் தொடர்பு இருந்தது என்பதை மறைத்துப் பொய் கூறிவிட்டேன்'' என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

வாஷிங்டனில் ட்ரம்பிடம் பணிபுரிந்த ஜார்ஜ் பபடோபோலோஸோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திண்டுக்கல் சீனிவாசனோ பொய்யானத் தகவல்களை கூறுகிறார்கள். பின்னர், அதனை ஒரு வருடம் கழித்து, ‘இல்லை’ என்று மறுக்கிறார்கள். ஆனால், இதனை அவருக்கு மேல் உள்ளவர்களோ அல்லது கட்சித் தலைமையோ ஏன் கண்டுகொள்வதில்லை என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்