பனாமா ஊழல் விவகாரம்: நவாஸ் மகன்களின் சொத்துகளை முடக்க உத்தரவு | Pakistan court orders to seize the property wealth of nawaz's sons

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (31/10/2017)

கடைசி தொடர்பு:18:00 (31/10/2017)

பனாமா ஊழல் விவகாரம்: நவாஸ் மகன்களின் சொத்துகளை முடக்க உத்தரவு

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகன்களின் சொத்துகளை முடக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவாஸ்

பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீ ஃப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்துவருகிறது. உலகிலுள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்துவருவதாக, பனாமா லீக்ஸ் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச் செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. நவாஸ் ஷெரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகள் மற்றும் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து,  நவாஸ் பிரதமர் பதவியை இழக்கும் அளவுக்கு விவகாரம் தீவிரமடைந்தது.

இதற்கு முன்னர், சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்ததால் நவாஸின் மகன்கள் மற்றும் மகள்மீது பிடிவாரன்ட் பிறப்பித்து கடந்த மாதம் உத்தரவிட்டார் நீதிபதி. இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் நவாஸ் ஷெரீஃபின் இரு மகன்களின் அத்தனை முதலீடுகள் மற்றும் சொத்துகளை முடக்க இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது.