வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (02/11/2017)

கடைசி தொடர்பு:16:05 (02/11/2017)

நியூயார்க் தாக்குதல்... ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் பேசிய மோடி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மோடி தன் இரங்கலை டிரம்ப்பிடம் தெரிவித்தார்.


நியூயார்க்கில் வர்த்தக மைய நினைவிடம் அருகே நேற்று சென்றுகொண்டிருந்த மக்கள் மீது, லாரியை மோதி ஒருவர் நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதலில் 8 பேர் உயிர் இழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். லாரியை ஓட்டி வந்த உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த சேபுல்லோ சாய்பவ் என்பவரை போலீஸார் சுட்டுப்பிடித்தனர். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் விவரம் கேட்டறிந்தார். 

பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியா-அமெரிக்கா இணைந்து போராடுவது என்றும் இருவரும் உறுதியேற்றுக் கொண்டனர். இந்தச் செய்தியை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மோடி தன் ட்விட்டர் பக்கத்திலும் இரங்கல் தெரிவித்து இருந்தார். இதற்கிடையே, பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு நபரை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க  உளவுத்துறையான எப்ஃ.பி.ஐ தெரிவித்துள்ளது. அந்த நபரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அவருடைய பெயர் முகமது ஜாயிர் கடிரோவ் (32) ஆகும். விரைவில் அவரை கைது செய்து விடுவோம் என்றும் எப்.பி.ஐ. கூறியுள்ளது.

- பிரதீப்