இப்படி ஓர் அழகிப் போட்டி... பார்த்திருக்கவே மாட்டீர்கள்?!

அழகிப் போட்டி

பெரு நாட்டில் நடைபெற்ற அழகிப் போட்டி குறித்த வீடியோக்கள், இரண்டு நாள்களாக ஆன்லைனை ஆக்கிரமித்துவருகிறது. வழக்கமாக அழகிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்கள், தங்கள் உடல் அளவுகளைச் சொல்வார்கள். ஆனால், பெருவில் கடந்த வாரம் நடைபெற்ற ‘பெரு அழகி’ப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் 23 பேர், வேறொன்றை ‘பேசு பொருளாக’ மாற்றியிருக்கிறார்கள். 

‘என்னுடைய [உடல்] அளவு’ (MisMedidasSon) என்று ஆரம்பிக்கும் அந்த வீடியோவில்... 

“70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் வீதிகளில் வன்முறைக்கு ஆளாகிறார்கள்” 

“13,000 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்” 

“25 சதவிகிதத்துக்கும் அதிகமான வளர் இளம் பெண்கள் அவர்களது பள்ளிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்” 

”ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறையால் கொல்லப்படுகிறாள்” 

என்று பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை அடுத்தடுத்து கூறிவிட்டு மின்னல் வேகத்தில் மறைகிறார்கள். அதுதான் சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. வீடியோவைக் காண : 

 

 

பெரு நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த காலங்களைவிட பல மடங்கு அதிகரித்துள்ளன. இதற்கு எதிராகப் பெண்கள் அமைப்புகளும் சமூக இயக்கங்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. கடந்த வருடம், பெரு நாட்டின் பிரதமரான மெர்சிடஸ் அரோஸ், இதற்கு முன்பு இருந்த ஓர் உறவில் பாலியல் ரீதியிலாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 29.10.17) தேசியக் கணக்கெடுப்பில் தன்னார்வலராக வேலை பார்த்துவரும் ஒரு பெண், கணக்கெடுப்பு நடத்தச் சென்ற ஒரு வீட்டில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். 

இந்த அழகிப் போட்டியில் கலந்துகொண்ட பெண்கள்போலவே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலும் பல்வேறு பெண்கள் #MisMedidasSon (என்னுடைய உடல் அளவு) என்ற ஹாஷ்டேகில் தங்கள் கருத்தைப் பகிர்ந்து வருகிறார்கள். பாலியல் பிண்டங்களாகப் பெண்களைக் காட்டுவதே அழகிப் போட்டிகள் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், போட்டியாளர்களின் தைரியமான இந்த முடிவுக்கு பாராட்டுகள் குவித்துவருகின்றன. 

”குரலற்ற பெண்களின் குரலாக இருக்கவே விரும்பினேன். தற்போது, நான்தான் அவர்களுடைய குரல். நாம் எந்தக் காரணத்தாலும் தோற்கடிக்கப்படக் கூடாது. தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்” என்று சொல்லியிருக்கிறார், போட்டியில் வெற்றிபெற்ற ரோமேனியா என்ற பெண்.

பாலியல் வன்முறை

Photo credit : Pixabay.com

இரண்டு நாள்களுக்கு முன்பு மெக்சிகோவில், கறுப்பு உடையில், முகத்தில் மண்டை ஓட்டை வரைந்துகொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் அணிவகுப்பை நடத்தியது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த நாட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. 

“நாங்கள் மிகவும் மோசமான வன்முறையைச் சந்திக்கிறோம்” என்கிறார், தன் 21 வயது மகளைப் பலி கொடுத்த தாய் க்ளாடியா. அவர் மகள், முன்னாள் காதலனால் நெஞ்சிலும் கழுத்திலும் கத்திக் குத்துகள் வாங்கி பிணமாகவே கண்டெடுக்கப்பட்டார். 

”இதுபோல கொடூர நிஜங்களைச் சுமந்தவாறு இந்தக் கூட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறோம்'' என்றார் அணிவகுப்பை ஒருங்கிணைத்த சமூகச் செயற்பாட்டாளர். 

அந்த அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் கொலையுண்ட பெண்களின் புகைப்படங்களோடு, மெழுகுவர்த்தி மற்றும் பூக்களையும் கைகளில் ஏந்தியவாறு ‘இனியும் ஒருவர் கொல்லப்படக் கூடாது’ (not one more) என்று முழக்கம் எழுப்பினர். 

சமீபத்தில், ஹாலிவுடில் புகழ்பெற்ற இயக்குநர் ஹார்வி வின்ஸ்டன்மீதான பாலியல் குற்றச்சாட்டை ஒட்டி #MeToo என்கிற கேம்பைன் வைரலானது. தற்போது, உலகம் முழுக்க ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் அந்தந்த நாட்டை உலுக்கி எடுத்துவருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!