வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (04/11/2017)

கடைசி தொடர்பு:13:55 (04/11/2017)

வளாகத்தில் மர்மநபர்: மூடப்பட்ட வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்ட மர்மநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் மாளிகையைத் தற்காலிகமாக மூடுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தனது மனைவி மெலானியாவுடன் ஆசிய சுற்றுப்பயணம் கிளம்பினார். இதனால் கடந்த இரண்டு நாள்களாகவே வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. வெள்ளை மாளிகைக்குச் சுற்றிப்பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் கெடுபிடி அதிகரித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாளிகையில் இருந்து ட்ரம்ப் வெளியேறிய சில நேரத்திலேயே வளாகச் சுற்றுச்சுவர் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்ட மர்ம நபர் ஒருவர் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டார். இவர் 'வாய்மொழி அச்சுறுத்தல்கள்’ கொடுத்தார் என்றும் ‘சந்தேகத்துக்குரிய நடவடிக்கை’யில் ஈடுபட்டார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனால் வெள்ளை மாளிகையில் உள்ள பார்வையாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் வளாகத்தினுள் இருந்த அத்தனை பேரும் உள்ளேயே வைக்கப்பட்டுள்ளனர். மர்ம நபரைக் கைது செய்த போலீஸார் விசாரணை முடியும் வரையில் வெள்ளை மாளிகை வளாகத்தை மூடி வைப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் இதர வெளியாட்களுக்குத் தற்போது அனுமதியில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.