5 நாள்... 3 தாக்குதல்... 37 உயிர்கள்...! ஓயாத அமெரிக்க துப்பாக்கிகள் | America facing deadliest gun shoot in trump administration

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (07/11/2017)

கடைசி தொடர்பு:10:25 (07/11/2017)

5 நாள்... 3 தாக்குதல்... 37 உயிர்கள்...! ஓயாத அமெரிக்க துப்பாக்கிகள்

அமெரிக்கா

நம்மூரில் வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்றுதான் திரைப்படம் ரிலீஸ் ஆகும். ஆனால், அமெரிக்காவில் ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. உலகின் வல்லமை பொருந்திய நாடான அமெரிக்கா, மற்ற நாடுகளை தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களாலும், பொருளாதார ஆதிக்கத்தாலும் மிரட்டக்கூடியது. அவ்வாறு மார்தட்டிக்கொள்ளும் அந்த நாட்டின் குடிமகன்கள் அவ்வப்போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதைத் தடுக்கத் தவறிவிடுகிறது. துப்பாக்கிச் சூடு போன்ற தாக்குதல்களில் மாதந்தோறும் சராசரியாக 50 பேர் உயிரிழக்கும் கொடூரம், கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. துப்பாக்கியை எடுத்து தெருவில் இறங்கி சரமாரியாகச் சுடும் சம்பவங்களும், அதில் பலர் சாகும் நிலையும் அமெரிக்காவின் அவலமாக கடந்த அரை நூற்றாண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஒற்றை வரியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் சொல்கிறார். 

''தாக்குதல்களுக்குத் துப்பாக்கி காரணமல்ல, மனநிலைதான் பிரச்னை'' என்று கூற அதிபருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. மிஸ்டர் ட்ரம்ப், உங்களுக்காக, இதோ உயிரிழந்தோர் பற்றிய புள்ளிவிவரங்கள். உங்களுக்கே இவை தெரிந்திருக்கும் என நம்புகிறேன். 

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பலருக்கு தேசிய ரைபிள் அசோசியேஷன் மற்றும் அமெரிக்க துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் லாபி செய்கிறது. மொத்தம் உள்ள 435 அமெரிக்க பிரதிநிதிகளில் 232 பேரை இந்த சங்கங்கள் லாபி செய்கின்றன. இதில் ஒன்பதுபேர் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவில் நடந்த மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பயன்படுத்தப்படுபவை AR -15 ரக துப்பாக்கிகளே. அமெரிக்காவில் 32,000 - 58,000 ரூபாய்க்கு 'செமி ஆட்டோமேட்டிக்' ரக துப்பாக்கிகள் கிடைக்கின்றன. இவை, அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கு இணையானவை.

ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து நடந்த மோசமான தாக்குதல்கள் எண்ணிக்கை மொத்தம் ஐந்து. அதில் உயிரிழந்தோர் மட்டும் 145 பேர். ஒரு ஆண்டில் அமெரிக்காவின் 127 நகரங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை வருமாறு:-

2013 - 288,  2014 - 268

2015 - 369, 2016 - 432

2017 - 350*

 

2017 நவம்பர் முதல் தேதியிலிருந்து 5-ம் தேதிக்குள் மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு பெரிய பின்னணி என்று ஏதுமில்லை. ஆனால், 37 உயிர்களை இத்தாக்குதல்கள் பறித்துள்ளன. 

தாக்குதல் 1:

நவம்பர் 1, மன்ஹாட்டன்

அமெரிக்க தாக்குதல்

டிரக்கில் வந்த 29 வயது இளைஞர் ஒருவர், பைக் செல்லும் பாதையில் புகுந்து வாகனத்தை வேகமாக மோதியதில் எட்டுபேர் உயிரிழந்தனர். போலீஸார் அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு அதிகாரபூர்வமாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்கவில்லை. எனினும், இது ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்தான் என அமெரிக்கா தெரிவித்தது. உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் செய்ஃபாலோ சாய்போவ் என்று அமெரிக்கா உறுதி செய்துள்ளது. 2010-ம் ஆண்டு ஒஹியோ பகுதியில் குடியேறியுள்ளார். 

தாக்குதல் 2:

நவம்பர் 2, டிராண்டன்

47 வயதான ஸ்காட் ஆஸ்ட்ரம், வால்மார்ட் கடைக்குள் புகுந்து அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் தீவிரவாதத் தாக்குதல் இல்லை என்றாலும், தாக்குதலுக்கான நோக்கம் தெரியாமல், மற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களைப் போல மர்மமாகவே உள்ளது.

தாக்குதல் 3:

நவம்பர் 5, டெக்ஸாஸ்

டெக்சாஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நடத்தியது டெவின் பேட்ரிக் செல்லி எனும் 26 வயது இளைஞர் என்பது உறுதியானது. தேவாலயத்துக்குள் நடந்த தாக்குதலில் AR 15 ரக துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதல் நடத்திய இளைஞர், அமெரிக்க விமானப்படையில் பயிற்சி பெற்றவர் என பென்டகன் தெரிவித்துள்ளது. இவை மட்டுமல்ல, அமெரிக்காவின் மோசமான எல்லா தாக்குதல்களின் பின்னணியிலும் துப்பாக்கி கலாசாரம் இடம்பெற்றிருப்பதை தவிர்க்க முடியாமல் தவிக்கிறது அமெரிக்கா.

அமெரிக்கா

“உலக நாடுகளை மிரட்டியும், வடகொரியாவை எச்சரித்தும் வரும் டிரம்ப் அவர்களே..., 'சிறப்பான அமெரிக்காவை உருவாக்குவேன்' என்று முழங்கினீர்களே, முதலில் அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்... துப்பாக்கிகளின் பசிக்கு மனித உயிர்களை மீண்டும் தீனியாக்காமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் தற்போது அமெரிக்காவில் ஒலிக்கும் மக்களின் அபயக்குரலாக உள்ளது" 

அமெரிக்க மக்களின் இந்தக் குரல் உங்களுக்குக் கேட்கிறதா மிஸ்டர் ட்ரம்ப்....?


டிரெண்டிங் @ விகடன்