இந்தியாவின் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க அமெரிக்கா நிதி! | US donates to encourage India's religious tolerence

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (10/11/2017)

கடைசி தொடர்பு:09:40 (10/11/2017)

இந்தியாவின் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க அமெரிக்கா நிதி!

இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா சுமார் 3.2 கோடி நிதி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு நிதி

இந்தியாவில் மத அடிப்படையிலான வன்முறைகளையும் வேற்றுமைகளையும் குறைப்பதற்கான தெளிந்த சிந்தனைகளை அளிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா நிதி அளிக்க உள்ளது. இதற்காக சுமார் 5 லட்சம் டாலர் (சுமார் 3.2 கோடி ரூபாய்) அளிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஜனநாயக, மனித உரிமை மற்றும் தொழிலாளர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “இந்திய மக்களின் சமூகப் பாதுகாப்பை அதிகரித்து, மத வன்முறைகளையும், வேற்றுமைகளையும் குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஊக்கத் தொகையாக, அரசு வழங்கும் தொகை 5 லட்சம் டாலர் பயன்படுத்தப்படும். அமெரிக்க அரசின் வெளிநாடுகளுக்கான நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் இந்தத் தொகையைக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்குறித்த விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது. இந்த நிதி உதவி இந்தியாவின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தது.