'நான் ஒரு தாய் என்பதை மறக்கவும் மறைக்கவும் முடியாது!' - பிரேஸிலை உலுக்கிய அதிபர் வேட்பாளர் மானுவிலா

மானுவிலா

பிரேஸில் நாடாளுமன்றத்தில், 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் அனல் பறக்கும் விவாதம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல், தனது கைக் குழந்தைக்குப் பால் கொடுத்தவாறே மைக் பிடித்து பேசத் தொடங்கினார், 36 வயதான மானுவிலா. அவரது இந்தச் செயல், உலகம் முழுவதும் வைரலானது. முன்னாள் பத்திரிகையாளரான மானுவிலா, கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்ந்த அரசியல்வாதி. 

பிரேஸிலில், பொது இடங்களில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கு, அந்நாட்டு அரசாங்கம் சுதந்திரம் அளித்தபோதும், தொலைக்காட்சி நேரலையின்போதே குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த வெகு சில பெண் ஊடகவியலாளர்களில் மானுவிலாவும் ஒருவர். நாடாளுமன்றதைத் தனது அனல் பறக்கும் காரசாரப் பேச்சுக்களால் ஈர்ப்பவர். குழந்தைக்கு அவர் பால் கொடுத்தது சர்ச்சையை எழுப்பியபோதும், ' நான் தாய் என்பதை ஒருநாளும் மறக்கவும் மறுக்கவும் முடியாது’ எனக் குறிப்பிட்டார். அவருடைய பெண் குழந்தை நடை பழகும் வரை மடியிலேயே வைத்துக்கொண்டு சபை நிகழ்ச்சிகளில் பங்குபெறுவார்.

1981-ம் ஆண்டு, பிரேஸிலில் போர்ட்டோ அலேக்ரே நகரில் நான்கு சகோதரர்கள்  இருந்த வீட்டில், செல்ல மகளாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பு வரை குடும்பச் சூழலால் பல நகரங்களில் படித்த மானுவிலா, தனது இதழியல் இளநிலை பட்டத்தை பிரேஸிலில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார். சமூக வெளிக்கானப் பாதையை அவர் அங்குதான் தேர்வுசெய்தார். கல்லூரிக் காலத்திலேயே மாணவர் யூனியன் தலைவர், இளைஞர் படை, மாணவர் அமைப்பு என அனைத்துத் தளங்களிலும் பல பொறுப்புகளை வகித்தவர். அரசியலுக்கான பாதையை அவர் தேர்வுசெய்ததும், போராட்டங்களின் வாயிலாகத்தான். 

2004-ம் ஆண்டு, தன்னுடைய 23-ம் வயதில் முதன்முதலாக ரியோ நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டார். முதல் தேர்தலிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, நாட்டின் இளம் நகராட்சித் தலைவரானார். வெறும் நகராட்சித் தலைவர்தானே என்று இல்லாமல், மாணவர்களின் கல்வி நலனுக்காக பல திட்டங்களை வகுத்தார். ' கல்வியுடன் விளையாட்டு மற்றும் இதர கலைகளும் மாணவர்களுக்கு அவசியம்' என்பதை நடைமுறையில் கொண்டுவந்தார். அடுத்தடுத்த வாய்ப்புகள் மானுவிலா வீட்டு வாயிலில் காத்திருக்கத் தொடங்கின. ரியோ நகரின் துணைக் கூட்டாட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நின்றார். அதைத் தொடர்ந்து, பிரேஸிலின் மாநிலப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் தேர்வானார். 

பிரேஸிலின் பிரபலப் பாடகர் டூகா லெய்ண்டெக்கர் என்பவரை மணந்த மானுவிலாவுக்கு லாரா என்ற மகள் உள்ளார். இடதுசாரிக் கொள்கைகளில் நம்பிக்கைக்கொண்ட மானுவிலா, தற்போது தன்னுடைய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளாராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ’2018-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், பிரேஸில் அதிபர் டெமருக்கு எதிராக இடதுசாரிகள் அனைவரையும் ஒன்றிணைத்து முன்னிறுத்தி வெல்வேன்’ என உறுதியாகக் கூறுகிறார். 

முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஓர் இளம் பெண், அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதற்கு பிரேஸிலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமிருந்து வரவேற்பும் பாராட்டும் குவிந்துவருகின்றன. 'தான் அதிபர் வேட்பாளர்' என நினைக்காமல், நாடாளுமன்ற விவாதங்களில் குழந்தையுடன் பங்கேற்றுவருகிறார் மானுவிலா டியாவிலா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!