கடல் நடுவே மூழ்கும் கற்பாறை நகரம்... நம்பவே முடியாத அதிசயம் நன் மடோல்! #NanMadol | The mysterious ancient coral reef city of Nan Madol

வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (12/11/2017)

கடைசி தொடர்பு:13:39 (13/11/2017)

கடல் நடுவே மூழ்கும் கற்பாறை நகரம்... நம்பவே முடியாத அதிசயம் நன் மடோல்! #NanMadol

நன் மடோல்

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆழிப்பேரலை, பூகம்பம், எரிமலை போன்ற பல இயற்கை சீற்றங்களால் மண்ணுக்குள்ளேயும், கடலுக்குள்ளோயும் புதைந்து, மறைந்து, அழிந்து போன நகரங்கள் உலகில் ஏராளம். 

இப்படிப்பட்ட இடங்களைப் பற்றி அறிந்துகொள்ள பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம் அந்த இடங்களின் வியக்க வைக்கும் வரலாறுகளும், அதை ஒட்டிய விடை தெரியாத பல மர்ம ரகசியங்களுமே. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்திய பெருங்கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக கூறப்படும் தமிழர்களின் பண்டைய சாம்ராஜ்யமான குமரிக்கண்டம். 

பல பாரம்பரிய வரலாறுகள் கடலுக்கடியில் மூழ்கியது போலவே தற்போது பசிபிக் பெருங்கடலில் ஒரு பண்டைய பாரம்பரியமானது இயற்கை சீற்றங்களால் அழிந்து வருகிறது. அதுதான், உலகின் மிகப் பெரும் தொல்லியல் அதிசயங்களில் ஒன்றான, உலகில் வேறு எங்கும் காண முடியாத, தனித்துவமிக்க கட்டிடக்கலைகளை கொண்டு உருவாக்கப்பட்ட, மர்மமான பொறியியல் அமைப்புடைய நன் மடோல் கற்பாறை நகரம்.

சிறுவயதில் தீக்குச்சிகளை ஒன்றின் மீது ஒன்றாக குறுக்கும் நெடுக்குமாக அகுக்கி வைத்து விளையாடி இருப்போம். ஆனால் நிஜத்தில் தீக்குச்சிகளுக்கு பதில், கற்பாறைகளை அடுக்கி வைத்து ஒரு கோட்டையை எழுப்பியிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

பசிபிக் பெருங்கடலின் நடுவில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான சிறு தீவுகளை ஒருங்கிணைந்த மாநிலமாக இருக்கிறது மைக்ரோனேஷியா. இப்பகுதியில் உள்ள  ஃபென்பீ தீவின் கிழக்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது இந்த அதிசய பாறை நகரம்.

உண்மையில் இந்தப் பாறை நகரத்தை அமைத்தவர்கள் யார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இன்றுவரையிலும் கிடைக்கவில்லை. பண்டைய எகிப்திய நாகரிகத்திற்கு சாட்சியாக இருக்கும் பிரமிடுகளைப் போலவே மர்மங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.

நன் மடோல்

கிபி 1100-களில் சியூடெல்லூர் வம்சத்தினரின் (Saudeleur) தலைமையின் கீழ் இந்தத் தீவு ஆட்சி செய்யப்பட்டுள்ளது. அப்போது முதல் சுமார் 1000 ஆண்டுகாலம் அவர்கள் தீவை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஃபென்பீ தீவை சுற்றிலும் சுமார்  92 கால்வாய்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் இந்த இடத்தை ’பசிபிக்கின் வெனிஸ் நகரம்’ என்றே அழைக்கின்றனர்.  

சதுர வடிவில் கட்டப்பட்டுள்ள நன் மடோல் கட்டிடம் உயரமான மதில்களை கொண்ட கம்பீர கோட்டையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் முழு வடிவ புகைப்பட ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. கடல் நீர் சூழந்த அந்த இடத்தில், பவளப் பாறைகளின் மீது இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை சுற்றிலும் பயிரிட ஏதுவான அமைப்பு இருந்திருகிறது. படிக்கட்டுகள், அறைகள், தூண்கள், சுவர்கள், என அனைத்தும் குறுக்கும் நெடுக்குமாக அடிக்கிய கற்பாறை அமைப்பு கொண்டிருப்பது பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. 

நன் மடோல் கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்பாறைகள் ஒவ்வொன்றும் 5 டன் முதல் 90 டன் வரையிலான எடை கொண்டவை. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள பாறைகள் எரிமலை கற்பாறை வகையை சார்ந்தது எனவும், தீவைச் சுற்றிலும் எரிமலை ஏதும் இல்லாத நிலையில், எரிமலை கற்கள் எவ்வாறு இங்கு கொண்டு வரப்பட்டது என்பதும் ஆய்வாளர்களின் மிகப்பெரும் சந்தேகம். ஒரு சில ஆய்வாளர்கள் வெகு தூரத்தில் இருந்து கடல் வழியாக இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்க கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.

எந்தவொரு தொழில்நுட்பமும் சாத்தியமில்லாத தீவில், கடலும், கடல் அலையும் சூழ்ந்த இடத்திற்கு எவ்வாறு இவ்வளவு எடை கொண்ட கற்கள் கொண்டு வரப்பட்டன? அதை 50 அடி உயரத்திற்கு நெடுவரிசையில் ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள்? அதைச் சரியான வரிசையில் எப்படி அடுக்கி வைத்தார்கள்?. கட்டுமானத் துறையை சேர்ந்த பல ஆய்வாளர்களால் கூட இந்தக் கட்டிட முறையை தெளிவாக விளக்க முடிய வில்லை.

நன் மடோல் என்பதற்கு "இடைவெளிகளுக்கு இடையில்" என்று பொருள். உண்மைகளுக்கும், புராண கதைகளுக்கும் இடையே இருக்கும் ஒரே ஆதாரம் இந்த இடமாகும்.

தற்போது இந்த பகுதியில் ஏறக்குறைய 35,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நன் மடோல் பற்றிய ஏராளமான கட்டுக்கதைகளை இன்றும் அங்கு வாழும் மக்களால் நம்பப்படுகிறது. 

அங்கு அமைக்கப்பட்டுள்ள 262 அடி மற்றும் 196 அடி கல்லறைகள் ஆட்சி செய்த மன்னர்களின் கல்லறைகள் எனவும். இறந்தவர்களின் ஆத்மாக்கள் அங்கு இருப்பதாகவும், அவர்கள் அந்த இடத்தை பாதுகாப்பதாகவும் நம்புகின்றனர். உலக அளவில் பல ஆய்வாளர்கள் தொடர்ந்து அங்கு பயணம் செய்து பல ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் நன் மடோலை மையப்படுத்தி ஹிஸ்ட்ரி, டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சிகள் தொடர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. 

நன் மடோல்

நீண்ட காலமாக கைவிடப்பட்ட நகரமாக இருந்துவந்த நன் மடோல், பசிபிக் பெருங்கடலின் தீவில் வாழ்ந்த மக்களின் கலை மற்றும் பாரம்பரியத்தை உணர்த்துவதோடு, கட்டிடக்கலையின் தனிப்பெரும் அடையாளமாய் விளங்குகிறது. பல காலமாய் தொடர்ந்து சூறாவளிகள் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு போன்றவற்றில் சிக்கி சிதிலம் அடைந்து கட்டிடத்தின் பெரும்பகுதி சேதம் அடைந்துவிட்டது. 5 மாதங்களுக்கு முன் நன் மடோல் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரும் அளவிலான சூறாவளியை சுட்டிக்காட்டியது NASA. தற்போது எஞ்சிய சில பகுதிகளையே நாம் காண முடியும். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close