இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுக்கும் ஆசிய மாநாடு | ASEAN summit begins; Will India get more investment from world?

வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (13/11/2017)

கடைசி தொடர்பு:15:56 (13/11/2017)

இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுக்கும் ஆசிய மாநாடு

ஆசியான் உச்சி மாநாடு தொடக்கம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 31வது ஆசிய உச்சி மாநாடு, மிகப் பிரமாண்டமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கைகோத்து தங்களின் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். ஆசிய மாநாட்டில் கலந்துகொள்ள வருகைதந்த பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ட்யூட்டர்டே வரவேற்றார். முன்னதாக, மணிலா விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். 

31 வது ஆசிய உச்சி மாநாடு மற்றும் 12 வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றிருப்பதன் மூலம், இந்தியா - ஆசிய நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் வலுப்படும் என்பதோடு, மணிலாவுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கிழக்காசியாவை நோக்கிய கொள்கையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த இரு உச்சி மாநாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. தவிர, 1981-ம் ஆண்டுக்குப் பின், பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார். எனவே, பிலிப்பைன்ஸ் நாட்டுடன் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் பேச்சுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிலாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார். 

ஆசியான் மாநாட்டில் மோடி - டிரம்ப்

உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியின் பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், சைபர்-பாதுகாப்பு மற்றும் பிரிவினைவாத எதிர்ப்பு உள்ளிட்ட விஷயங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய மாநாட்டில் பங்கேற்ற பின்னர், மணிலா அருகேயுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மகாவீர் பவுண்டேஷனுக்குப் பிரதமர் மோடி சென்று பார்வையிடுகிறார். 

இதைத் தொடர்ந்து, ஆசிய மாநாட்டுக்காக வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்து, இந்திய - அமெரிக்கா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி பேச்சு நடத்துகிறார். பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் பிரதமர், இன்று மாலை ஆசிய அமைப்பின் வர்த்தக மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றுகிறார். பின்னர், பிலிப்பைன்ஸில் உள்ள இந்தியத் தூதர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

ஆசிய அமைப்பில் புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிய மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் அந்தந்த பிராந்தியத்தில் மக்களைப் பாதிக்கக்கூடிய, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, தற்போது நான்கு மாதங்களக்குப் பின்னர், மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையேயும் வளர்ந்து வரும் ஜனநாயக மதிப்பீடுகள், வர்த்தக உறவுகள் தொடர்பான பேச்சுகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய வர்த்தக மாநாட்டில் உரையாற்றவிருக்கும் பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உகந்த சாதகமான மற்றும் உறுதியான சூழல் நிலவுவதாக விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது. இதன்மூலம், பிரதமரின் இந்தப் பயண முடிவில், இந்தியாவில் பிலிப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்