வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (13/11/2017)

கடைசி தொடர்பு:19:12 (13/11/2017)

”சருமத்தின் சுருக்கங்கள் என் சாதனையைச் சுருக்கவில்லை!” - சரும நோயால் பாதிக்கப்பட்ட சாரா மாடலான கதை #BreakingStereotypes

சாரா

நாற்பது வயதைக் கடந்தவர்களின் உடம்பில் லேசான சுருக்கம் தோன்றினாலே அதனை மறைக்க, ஆன்டி-ஏஜிங் க்ரீம்களைத் (Anti-aging creams) தேடி ஓடுவார்கள். அப்படியிருக்க, இளமை ததும்பும் வயதில் அரிய சரும நோயின் காரணமாக, முதுமையான கிழவிபோல தோலில் சுருக்கம் ஏற்பட்டால் ஒரு பெண் என்ன செய்வாள்? தன்னம்பிக்கையும் துணிவும்கொண்ட பெண்ணாக இருந்தால், அதையே சாதனையாக்கி வாழ்க்கையில் கம்பீர நடைபோடுவாள். அப்படித்தான் செய்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த 26 வயதான, சாரா கர்ட்ஸ் (Sara Geurts). 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர் சாரா. எஹ்லேர்ஸ்-டன்லோஸ் சிண்ட்ரோம் (Ehlers-Danlos Syndrome) என்ற அந்த அரிய நோய் தாக்கியபோது, அவருக்கு பத்து வயது. நம் தோலில் இருக்கும் எலாஸ்டிக் தன்மைதான் வயதுக்கு ஏற்ப தோற்றத்தை தரும். வயது அதிகமாக அதிகமாக இந்த எலாஸ்டிக் வலுவிழந்து, தோல் சுருங்க ஆரம்பிக்கும். ஆனால், இந்த நோய் உள்ளவர்களுக்கு இளம் வயதிலேயே எலாஸ்டிக் தன்மை வலுவிழந்து தோல் சுருங்கிவிடும். எலும்புகளும் வலுவிழக்கும். சாராவுக்கும் அப்படித்தான் ஆனது.

சாராபள்ளியிலும் கல்லூரியிலும் சக மாணவர்களின் கேலியால் பாதிக்கப்பட்ட சாரா, முழு உடலை மறைக்கும் ஆடைகளை அணிந்துகொள்வார். உடல் வலியைவிட மனவலி அதிகமானது. ஆனால், தன் நிலைப் பற்றி சிந்திக்க வைத்தது, தனக்கு நடந்த ஒரு பிரேக்-அப் என்று கூறுகிறார் சாரா!  ''அதுதான், என் உடலைப் பற்றி சிந்திக்கவைத்து, இந்த நிலைக்குக் கொண்டுவந்தது. என் நட்பு வட்டம், உறவுகள் என யாரும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. அவ்வளவு ஏன்? எனக்கு 23 வயது வரை நானே என்னைப் புரிந்துகொள்ளவில்லை. பிறகு, என்னை சுயமதிப்பீடு செய்யத் தொடங்கினேன். என் உடல்மீது நான் காட்டும் வெறுப்பு, என் மனநிலையைப் பாதிப்பது புரிந்தது. என் மனநிலையால் உறவுகளும் நட்புகளும் பாதிப்பதை உணர்ந்தேன். அப்போதுதான் தோழிமூலம் மாடலிங், புகைப்படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது'' என்கிறார் சாரா. 

2015-ம் ஆண்டு, சமூக வலைதளத்தில் 'லவ் யுவர் லைன்ஸ்' (love your lines) என்கிற பிரசாரம் நடத்தப்பட்டது. அதற்காக, பிகினி உடையில் மாடல் போஸ் அளித்து, படங்களை அனுப்பிவைத்தார் சாரா. அன்றிலிருந்து சாராவின் வாழ்க்கையில் நம்பிக்கை துளிர்த்தது. தன் உடலை நேசிப்பதே இந்த வாழ்க்கையை ரசிப்பதற்கான திறவுகோல் என உணரத் தொடங்கினார். 

சாரா

“நான் என் புகைப்படத்தை முதல்முறையாக அந்தப் பிரசாரத்துக்கு அனுப்பினேன். அதற்கு 25,000 லைக்குகள் வந்ததை நம்பவே முடியவில்லை. அன்று நான் இரண்டு மணி நேரம் தேம்பித் தேம்பி அழுதேன். ஏனென்றால், அந்த அளவுக்கு நான் மிகுந்த அவநம்பிக்கையில் இருந்தேன்” என்கிற சாராவுக்குத் தற்போது இன்ஸ்டாகிராமில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

“என் சருமத்தைப் பற்றி மிகவும் தாழ்வாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், என் வாழ்க்கையில் நடந்திருக்கும் அழகான விஷயமே அதுதான் என்பது புரிந்தது. உங்களின் குறைகள்தான் உங்களைத் தனித்துவமாகக் காட்டும். நீங்கள் யார், உங்களின் பயணம் என்ன என்பதை அதுதான் முடிவு செய்யும். மாடலிங், பத்திரிகை உலகில் அழகு என்று எந்தெந்த விஷயங்களை நிர்ணயித்துள்ளார்களோ, அந்த ஸ்டீரியோடைப் விஷயங்களை உடைப்பதே என் நோக்கம். அதற்காகவே மாடலிங் செய்கிறேன்'' என்கிறார் சாரா.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்