கரையொதுங்கிய பிரமாண்ட திமிங்கிலங்கள்! - காப்பாற்றப் போராடிய அதிகாரி | Government official tried to rescue whales beached off Indonesia

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (14/11/2017)

கடைசி தொடர்பு:18:00 (14/11/2017)

கரையொதுங்கிய பிரமாண்ட திமிங்கிலங்கள்! - காப்பாற்றப் போராடிய அதிகாரி

இந்தோனேஷியாவின் ஆச் மாகாணத்திலுள்ள உஜாங் கரெங் கடற்கரையில், பிரமாண்டமான 10 ஸ்பெர்ம் வகை திமிங்கிலங்கள் கரையொதுங்கிய சம்பவம், அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

திமிங்கலங்கள்

திமிங்கிலங்கள் கரையொதுங்கிய தகவல் அறிந்ததும், கடல்வளம் மற்றும் மீன்வளத்துறை தலைமையதிகாரி நூர் மஹ்தி, திமிங்கிலங்களைக் காப்பாற்றி, கடலுக்குள் கொண்டு செல்லும் மீட்புப் பணியில் இறங்கினார். இவருக்கு உதவியாக நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் திமிங்கிலங்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். முதலில் கரையில் ஒதுங்கி, நீந்த முடியாமலிருந்த திமிங்கிலங்களின் மீது தண்ணீரைக் கொட்டி, அவற்றின் உடலைக் குளிர்வித்தபடியே, படகுகளின் மூலம் கடலுக்குள் கொண்டு செல்லும் முயற்சி முடுக்கிவிடப்பட்டது. அவற்றில் காயமடைத்திருந்த நான்கு திமிங்கிலங்கள் உயிரிழந்தன. மீதமுள்ள ஆறு திமிங்கிலங்கள் நடுக்கடலுக்குள் கொண்டு சென்றுவிடப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளன. இச்சம்பவத்தைப் பார்த்த அங்குள்ள மக்கள், நூர் மஹ்திக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திமிங்கலங்கள்

ஸ்பெர்ம் வகை திமிங்கிலங்கள் சராசரியாக 52 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இதுகுறித்து நூர் மஹ்தி குறிப்பிடுகையில், "இவ்வகைத் திமிங்கிலங்கள் குழுவாகப் பயணிக்கும்போது, தலைமையிலிருக்கும் திமிங்கிலம், ஏதேனும் உடல்நலக்குறைவின் காரணமாகத் தவறுதலாகக் கரையொதுங்கினால், மற்றவைகளும் கரையொதுங்க வாய்ப்புள்ளது அல்லது நிலநடுக்கம், சுனாமி போன்ற அதிர்ச்சியை உணர்ந்திருந்தாலும், திமிங்கிலங்கள் வழி தவற வாய்ப்புள்ளது" என்றார். அங்குள்ள மக்கள் திமிங்கிலங்கள் கரையொதுங்கியதை அடுத்து, சுனாமி பயத்தால் பீதியடைந்துள்ளனர்.