வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (15/11/2017)

கடைசி தொடர்பு:20:09 (15/11/2017)

வைரலாகும் லிங்க்டு-இன் சி.இ.ஓ வின் செல்ஃபி: நெகிழ்ந்த பெண் ஊழியர்! #ViralPhoto

லிங்க்டு-இன் சி.இ.ஒ

மூகவலைதளத்தில் ஒரு செல்ஃபி வைரலாக விதவிதமான காரணங்கள் இருக்கும். பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி, புதிய இடங்களில் எடுத்த செல்ஃபி, நமக்குப் பிடித்தவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி என அந்த வைரல் செல்ஃபி படத்தைக் கொண்டாடுவோம். அப்படி ஒரு செல்ஃபி தற்போது வைராலாகி வருகிறது. சமீபத்தில் லிங்க்டு - இன் சி.இ.ஓ எடுத்த செல்ஃபிதான் அது.’அடடே! இவ்வளவு எளிமையான சி.இ.ஓ வா?’ என நெகிழ்ந்துபோயிருக்கிறது சமூகவலைத்தள உலகம்.


அப்படி என்ன செய்தார், லிங்க்டு-இன் சி.இ.ஓ ஜெஃப் வைனர் (Jeff Weiner)? அயர்லாந்து நாட்டில் தலைநகரமான ’டுப்லிங்’ அலுவலகத்திற்கு வருகை தர திட்டமிட்டிருக்கிறார் ஜெஃப். ஒட்டுமொத்த ’டுப்லிங்’ அலுவலகமே சி.இ.ஓ வை வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்க, ஒரு பெண் ஊழியர் மட்டும் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். மரியா வல்டன் என்பவர், சி.இ.ஓ வருகை தரும் நாளில்தான் அவர் விடுமுறை பயணத்தில் செல்ல திட்டமிட்டிருந்தார். ஏற்கெனவே திட்டமிட்டுள்ள பயணத்தை மேற்கொள்வதா அல்லது சி.இ.ஓ வை சந்திக்க விடுமுறை திட்டத்தை ரத்துசெய்யலாமா என்ற மரியா வல்டனுக்கு ஒரே குழப்பம்! சட்டென்று மரியாவுக்கு ஒரு ஐடியா தோன்றியது.

லிங்க்டு-இன் சி.இ.ஒதனது அலுவலக டெஸ்க்கில், அவரைச் சந்திக்கமுடியாமல் போன காரணத்தையும் தனது புகைப்படம் ஒன்றையும் விட்டுச்சென்றிருக்கிறார் மரியா.
விடுமுறை பயணத்திலிருந்து திரும்பி வந்த மரியாவுக்கு இன்ப அதிர்ச்சி! தனது அலுவலக டெஸ்க்கின் அருகே நின்று சி.இ.ஓ ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை மரியாவால் நம்பவே முடியவில்லை. 
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை, தன் லிங்க்டு-இன் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட மரியா, ‘ உங்களின் சி.இ.ஓ உங்களின் குழுவைச் சந்திக்க வருகிறார் என்று திட்டமிடப்படுகிறது. எதிர்பாராவிதமாக அன்று நீங்கள் விடுப்பில் இருக்கிறீர்கள். இந்தச் சங்கடமான சுழ்நிலையில், சி.இ.ஓ உங்கள் கேபின் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டால் எப்படியிருக்கும். அப்படிப்பட்ட ஆனந்த நிலையைத்தான் எங்கள் சி.இ.ஓ வின் செல்ஃபி எனக்குத் தந்திருக்கிறது. மிக்க நன்றி, ஜெஃப் வைனர்! இந்த டீமில் வேலை செய்வதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இது என்னுடைய ஃபேவரட் செல்ஃபி'' என்று அந்தப் புகைப்படத்தை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார் மரியா. 


கிட்டத்தட்ட 33,000 லைக்குகள் குவிந்திருக்கும் இந்த செல்ஃபியை பலரும் பாராட்டியிருக்கிறார்கள். 24 மணிநேரமும் வேலை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மத்தியில், தன் ஊழியருக்கு வேலையைத் தாண்டி வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு, சக மனிதர்களைப் போல் கருதிய ஜெஃப் வைனர் காட்டிய தலைமைப் பண்பை பலரும் சமூகவலைதளத்தில் பாராட்டியிருக்கிறார்கள். 


”சின்னச் சின்ன விஷயங்கள்தான் மனிதர்களை ஒன்று சேர்க்கும். ஜெஃப் செய்தது மிகவும் புதுமையாக இருக்கிறது. அவர் செம்ம கூல்!’ என்று ஒருவர் எழுதியிருந்தார். 

“உங்கள் சி.இ.ஓ ஏன் இவ்வளவு கூலாக இருக்கிறார். எனக்குப் பொறாமையாக இருக்கிறது” என ஸ்ருதி கபூர் கிண்டலாகப் பதிவுட்டிருந்தார். 

‘இவரிடமிருந்துதான் உண்மையான தலைமைப் பண்புகளைக் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார். 

‘எங்க நாட்டுல மட்டும் இப்படி நடத்திருந்தா, அந்த சி.இ.ஓ என்னை வேலையை விட்டு தூக்கியிருப்பாங்க” என்று மற்றொருவர் எழுதியிருந்தார்.

மரியா எழுதியிருந்த அந்தப் பதிவிற்கு, “என் டுப்லிங் பயணத்தில் உங்களைச் சந்திக்க தவறிவிட்டேன். சர்வதேச அளவில், உங்களின் திறமையை நிலைநாட்டுங்கள். நீங்கள் ஒரு கேம்- சேஞ்சர்” என்று பாராட்டி கமென்ட் செய்தியிருக்கிறார் ஜெஃப். உண்மையிலேயே அவர் செம்ம கூல், பாஸ்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்