ஜப்பான் முட்டை... தென் கொரிய சாஸ்... பிலிப்பைன்ஸ் ஐஸ்க்ரீம்... அரசியல் பேசும் ட்ரம்ப்பின் ஆசிய மெனு! | What trump ate in asia

வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (16/11/2017)

கடைசி தொடர்பு:12:28 (16/11/2017)

ஜப்பான் முட்டை... தென் கொரிய சாஸ்... பிலிப்பைன்ஸ் ஐஸ்க்ரீம்... அரசியல் பேசும் ட்ரம்ப்பின் ஆசிய மெனு!

ட்ரம்ப்

ஒருவர் நின்றால், நடந்தால், பேசினால், கையெழுத்துப் போட்டால் எல்லாமே செய்தியாகி வைரலாகிறது என்றால், அவரது சாப்பாடு மெனு மட்டும் விதிவிலக்கா என்ன? ஆம்... ஆசியப் பயணத்தில் ட்ரம்ப் சாப்பிட்ட உணவு வகைகளும் வைரலாகியுள்ளது. 

ஆசிய நாடுகள் பயணத்தில் ட்ரம்ப் சாப்பிட்ட 360 வருட கொரிய சோயா சாஸ் அமெரிக்காவைவிடப் பழைமையானது என்பது தொடங்கி, ட்ரம்ப்புக்குப் பச்சை மாமிசங்கள் பிடிக்காது என்பதுவரை ஒட்டுமொத்த மெனுவும் 'வாவ்' ரகம்தான். அவரது ஆசியப் பயணத்தில் இடம்பிடித்த உணவுகள் இதோ...

ஸ்டார்ட்டர்:

விரும்பிய ஒபாமா... வெறுத்த ட்ரம்ப்!

ஜப்பான் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாப்பிட்ட மதிய உணவுக்கு ஸ்டார்ட்டராக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீஃப், அமெரிக்கர் ஹம்பர்கர் ஆகியவை இடம்பெற்றன. மேலும், டோக்கியோவின் டெப்பன்யாக்கி உணவகத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்டீக் எனும் வேகவைக்கப்பட்ட இறைச்சி வகையைச் சார்ந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு ஒபாமா, சுகியாபாஷி ஜிரோ சூசி உணவகத்தில் உணவருந்தினார். அவரது மெனுவில் பச்சை மாமிசங்கள் இடம்பிடித்திருந்தன. ஆனால், ட்ரம்ப் அந்த உணவை வெறுத்ததால், பச்சை மாமிசம் அவரது உணவில் மிஸ் ஆனது.

அதுமட்டுமல்லாது சவான்முஷி எனும் நீராவியில் வேகவைக்கப்பட்ட முட்டையும் ட்ரம்ப் மெனுவில் இருந்தது. ஜப்பானின் கலாசாரத்தை எடுத்துரைக்கும் டெரயாக்கி சிக்கன் ட்ரம்பின் ஃபேவரைட்டாம். 

அரசியல் பேசிய உணவுகள்

இறாலும் எல்லை பிரச்னையும்!

டொக்டோ மற்றும் டேக்‌ஷிமா தீவுகள் பகுதிக்கு இடையே பிடிக்கப்பட்ட இறால் அவருக்கு உணவாகச் சமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதி, தென் கொரியா மற்றும் ஜப்பான் இடையே பிரச்னை நிலவும் பகுதியாகும். இந்த உணவை ட்ரம்ப் சாப்பிடவில்லை என்ற செய்தியும் பரவி வருகிறது. வட கொரிய பிரச்னையில் அதிரடியாக இருக்கும் ட்ரம்ப், அதில் தலையிடுவதைத் தவிர்ப்பதற்காகவே அந்த உணவைத் தவிர்த்திருக்கலாம் என்கிற அரசியல் பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

ட்ரம்ப்

அமெரிக்காவைவிட வயதான சாஸ்!

தென் கொரிய உணவான சோயா சாஸ், ட்ரம்புக்குப் பரிமாறப்பட்டது. இது, 360 வருட பழைமையான சாஸ் என்றும், இதற்கு அமெரிக்காவைவிட வயது அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது, தென் கொரியாவின் பழைமையைப் போற்றும் நோக்கில் இடம்பெற்றதாக அந்த செஃப் தெரிவித்துள்ளார்.

இங்கும் மெக்ஸிகோ!

அமெரிக்க - தென் கொரிய ராணுவப் படையுடன் சாப்பிடும்போது அமெரிக்கர்களின் விருப்ப உணவான மெக்ஸிகன் டேக்கோஸ், புரிடோஸ் போன்றவற்றைச் சாப்பிட்டுள்ளார். சீன அதிகாரிகளுடனான சந்திப்பில், அமெரிக்கர்களுக்குப் பிடித்த குங் பாவ் சிக்கன் மற்றும் சில்லி ஆயில் மீன் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சீன மொழியில் பாடி அசத்திய ட்ரம்ப் பேத்தி!

ஆசிய - பசிபிக் பொருளாதாரச் சந்திப்பில் இரவு உணவுக் கொண்டாட்டங்களின்போது திரையில் தோன்றிய ட்ரம்பின் பேத்தி சீன மொழியில் பாடி அசத்தினார்.

 

அவருக்கு வழங்கப்பட்ட டெசர்ட்டில் வியாட்நாமின் ஃபேமஸ் ஹலோ.. ஹலோ ஐஸ்க்ரீம் வழங்கப்பட்டது. பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது விமானத்தில் அவருக்கு மிகவும் பிடித்த அமெரிக்க உணவே வழங்கப்பட்டது.

ட்ரம்ப்

ட்ரம்பின் உணவுகளில் அந்தந்த நாடுகளின் அரசியல் பார்வையும் புகுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், அவருக்கான உணவைச் சோதித்து வழங்குவதிலோ பலகட்ட பாதுகாப்புகள் இருந்துள்ளன. இது, ட்ரம்புக்கு மட்டுமல்ல... முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும்போதும் உணவு விஷயத்தில் ஹோட்டல் நிர்வாகத்தில் கெடுபிடியாக இருப்பார்களாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கும் உணவகத்தின் கிச்சனே அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்குமாம். அமெரிக்க அதிபரின் உணவில் ஆயிரம் அரசியலை நாடுகள் புகுத்தினாலும் தனக்குப் பிடித்ததைத்தான் செய்வேன் என்பதை உணவாலும் உணர்த்திவிட்டுச் சென்றுள்ளார் ட்ரம்ப்.


டிரெண்டிங் @ விகடன்