புரட்சியாளருக்கு எதிராக ஒரு ராணுவ புரட்சி..! ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே சரிந்த கதை | fall of Robert Mugabe

வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (17/11/2017)

கடைசி தொடர்பு:15:53 (17/11/2017)

புரட்சியாளருக்கு எதிராக ஒரு ராணுவ புரட்சி..! ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே சரிந்த கதை

ஜிம்பாப்பே அதிபர் ராபர்ட் முகபே

ங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த ஜிம்பாப்பே நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் ராபர்ட் முகபே(Robert Mugabe). ஜிம்பாப்பேவின் முந்தைய பெயர் ரெகோத்சியா. வடக்கு ரெகோத்சியா, தெற்கு ரெகோத்சியா என இரண்டு பிரிவாக இருந்தது. தெற்கு ரெகோத்சியாவை பிரிட்டிஷ் ஆண்டது. சிறுபான்மையினராக இருந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். பெரும்பான்மை கறுப்பர்கள் இருக்கும் தேசத்தில் இருந்து ஆங்கிலேயர்களை அகற்றும் போராட்டங்கள் 1960-களில் தீவிரம் அடைந்தன. ஆங்கிலேய அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதால் தேசத் துரோக வழக்கில் Robert Mugabe கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை ஆனதும், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த மொகபே, ஜிம்பாப்பே ஆப்ரிக்க தேசிய யூனியன் என்ற கட்சியைத் தொடங்கி, அதன் தலைவர் ஆனார்.

விடுதலைப் போராட்டம்

ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டத்தை தீவிரப்படுத்தினார். தெற்கு ரெகோத்சியாவின் பிரதமராக இருந்த Ian Smith-க்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்கள் ஓயாததை அடுத்து தெற்கு ரெகோத்சியாவுக்கு விடுதலை கொடுக்க பிரிட்டன் முடிவு செய்தது. இதன் விளைவாக 1980-ல் தெற்கு ரெகோத்சியா தேர்தல் நடைபெற்றது. விடுதலை அடைந்த தெற்கு ரெகோத்சியாவின் முதல் பிரதமராக ராபர்ட் முகபே தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நாட்டின் பெயரையும் ஜிம்பாப்பே என்று மாற்றினார்.
இப்போது ராபர்ட் முகபேவுக்கு 93 வயதாகிறது. 1987-ம் ஆண்டில் இருந்து ஜிம்பாப்பேவின் அதிபராக முகபே இருந்துவருகிறார். ஜிம்பாப்பே இப்போது பெரும் பொருளாதார சிக்கலில் தவிக்கிறது. இந்தச் சூழலில், அந்நாட்டின் ராணுவம் முகபே-வுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டது. அவரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது. முகபே சரிந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

பொருளாதாரச் சரிவு

முதல் காரணம் பொருளாதாரச் சரிவு. கடந்த பத்தாண்டுகளில் அடுத்தடுத்து ஜிம்பாப்பே பொருளாதார சரிவில் சிக்கியது. நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை 90 சதவிகிதமாக இருக்கிறது என்று ஜிம்பாப்பே நாட்டின் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. 2008-ம் ஆண்டில் இருந்தே ஜிம்பாப்பே அதீத பணவீக்கத்தில் சிக்கித்தவிக்கிறது. இதனால், ஒரு கட்டத்தில் நாட்டின் பண மதிப்பை முகபே முடக்கினார். எனவே, மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் போனது. ஜிம்பாப்பே சொந்தமாக டாலர் வெளியிட்டது. இது பாண்ட் நோட் என்று அழைக்கப்பட்டது. ஆனால், அதன் மதிப்பும் நாளடைவில் சரிய ஆரம்பித்தது. வங்கிகளில் கட்டுக்கட்டாக சேமித்து வைத்திருந்தவர்கள் பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடினர்.  தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஜிம்பாப்பே மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், ஜிம்பாப்பே தலைநகர் ஹராரே-வில் பிட்காயின் விலை அதிகரித்தது.

ஜிம்பாப்பே போராட்டங்கள்

ஜிம்பாப்பேவுக்கு இந்த நிலை ஏற்படுவதற்கு முகபே-வும் ஒரு காரணம் என்று சொல்கின்றனர். 93 வயதாகும் அவர், இன்னும் பதவியை விட்டு இறங்காமல் இருக்கிறார். அதிபர் முகபே-வின் ஆதரவாளர்கள் தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக வன்முறையில் ஈடுபட்டுவந்தனர். ஒரு கட்டத்தில் தன்னையும், கட்சியையும் உயர்த்திக் கொள்வதற்காக ஆட்சி அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் முகபே மீது எழுந்தது. தம்முடைய புரட்சிகரமான திட்டங்கள் முடிவுக்கு வரும் வரை தாம் பதவி விலகப் போவதில்லை என்று அடிக்கடி வீர வசனங்களையும் பேசி வந்தார்.

வலுவான எதிர்க்கட்சி இல்லை

முதுமை காரணமாக முகபேவால், திடமான நிலையில் ஆட்சி செய்ய முடியவில்லை. உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. நாட்டின் இப்போதைய சிக்கலுக்கு அவரது உடல்நலமும் ஒரு காரணம். முகபேவின் நீண்டகால ஆட்சிக்குக் காரணம், ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லை என்றும் சொல்லலாம். அவர், எதிரிகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிடுவார். 1999-ம் ஆண்டில் ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் என்ற எதிர்க்கட்சி ஒன்று உருவானது. நாட்டின் பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கையில் எடுத்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் முகபேவை ஒன்றும் செய்யமுடியவில்லை. அதேபோல தமது சொந்த கட்சியிலேயே தமக்கு எதிரானவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள மாட்டார். துணை அதிபர் எம்மர்சன் பதவியில் இருந்து தூக்கப்பட்டதற்கும்  முகபேதான் காரணம். எனவே, முகபேவுக்கு மாற்றாக வலுவான ஒரு தலைவர் ஜிம்பாப்பேவில் இல்லை என்று சொல்லலாம்.

வீட்டுச் சிறை

இதனிடையே, கடந்த 15-ம் தேதி ஜிம்பாப்பே தலைநகர் HARARE-வில் உள்ள அதிபரின் வீட்டுக்குள் நுழைந்த ராணுவம், முகபேவை வீட்டுச் சிறையில் வைப்பதாக அறிவித்தது. எனினும், ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் முகபே எங்களது இலக்கு அல்ல. அவரைச் சுற்றி இருக்கும் குற்றவாளிகளைக் களையெடுக்கவே இந்தப் புரட்சியில் ஈடுபட்டோம் என்று சொல்லி இருக்கிறது. எது, எப்படியாகினும், புரட்சி முடிவுக்கு வந்த பின்னர் முகபே ஆட்சியில் இருக்கமாட்டார் என்று சொல்கிறார்கள். ஒரு புரட்சியாளராக அடையாளம் காணப்பட்ட முகபே, இப்போது ஒரு புரட்சியின் மூலமே அகற்றப்பட இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close