புடைவை அணிவதை அரசியலாக்காதீர்கள் - ’நியூயார்க் டைம்ஸ்’ கட்டுரைக்கு எதிராகக் குரல் கொடுத்த இந்தியப் பெண்கள்! | New York Times article about politicising Indian saree triggers row

வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (17/11/2017)

கடைசி தொடர்பு:21:18 (17/11/2017)

புடைவை அணிவதை அரசியலாக்காதீர்கள் - ’நியூயார்க் டைம்ஸ்’ கட்டுரைக்கு எதிராகக் குரல் கொடுத்த இந்தியப் பெண்கள்!

புடவை

மீபத்தில், பிரபல அமெரிக்க ஊடகமான  ‘நியூயார்க் டைம்ஸ்’ இந்தியாவைப் பற்றி வெளியிட்டுள்ள ஒரு செய்தி, சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. “In India, Fashion Has Become a Nationalist Cause”, என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையில், 2014ம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, மேற்கத்திய ஆடைகளைப் புறம்தள்ளிவிட்டு, இந்தியாவில்  தயாரிக்கப்படும் பாரம்பர்ய ஆடைகளை அதிகமாக ஊக்குவித்துவருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நியாயப்படுத்தும்விதமாக, அந்தக் கட்டுரையாளர் வாரணாசியில் கைத்தறி தொழிலில் இருப்பவர்கள் சிலரையும் பேட்டி எடுத்திருக்கிறார். இந்தக் கட்டுரை முழுவதும், பாரம்பர்ய ஆடைகளை, குறிப்பாகப் புடைவையை, விளம்பரப்படுத்துவது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை பரப்புத் திட்டங்களில் ஒன்று என்று கூறப்பட்டிருந்தது. 2014ம் ஆண்டு தேர்தலின்போது, வாரணாசியில் கைத்தறி தொழிலில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார் என்றும், தற்போது மூன்று  ஆண்டுகள் கழித்து, கட்டுரையாளர் வாரணாசி சென்று பார்க்கும்போது, எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றும்  குறிப்பிட்டிருந்தார்.  கட்டுரையின் முடிவில், மோடி அரசு கலாசாரம் சார்ந்த ஆடைகளை விளம்பரம்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும், உலகில் உள்ள பல நாடுகள் கலாசார மாற்றத்திற்குத் தயாராக இருக்கின்றன. அது இந்தியாவில் சாத்தியமாகுமா என்ற கேள்வியுடன் முடித்திருந்தார்.
 இந்தக் கட்டுரையைப் படித்த பல இந்தியர்கள், “எந்த ஒரு அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் எழுதப்பட்டது” என்று சமூகவலைதளத்தில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  

புடவை”இப்போதுதான் நியூயார்க் டைம்ஸ் எழுதிய கட்டுரை படித்தேன். விழுந்து விழுந்து சிரித்தேன். புடைவை  இந்துக்களின் ஆடையல்ல. இந்தியர்களின் ஆடை! இந்தியாவைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்வது கடினம், எழுத்தாளரே!

இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா, மம்தா பனர்ஜி என எல்லாருமே  புடைவையைத்தான் அணிந்தார்கள். டாக்டர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளும் கம்பீரமாக புடைவை அணிந்தார்கள்”, என்று ஆங்கில எழுத்தாளர்  ரஷ்மி பன்சால் என்பவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“2014ம் ஆண்டுக்கு முன், எந்த ஆணும் குர்தா அணிந்துக்கொள்ளவில்லையா, எந்தப் பெண்ணும் புடைவை அணிந்துகொள்ளவில்லையா’, என்று பத்மஜா ஜோஷி என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

“நியூயார்க் டைம்ஸ் புடைவையைப் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்து அதிர்ச்சியடைந்தேன். இன்னும், நாம் தோசை சாப்பிடுவதையும், பானிப்பூரி சாப்பிடுவதையும் தவறு என்று கூறுவார்கள் போல”,   என்று ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“இந்தக் கட்டுரை எழுதியவரை பணியிலிருந்து நீக்கவேண்டும். பனராஸ் புடைவைக்கும் மேற்கத்திய உடைகளுக்கும் சம்பந்தமே இல்லை’, என்று மற்றொருவர் பதிவிட்டிருந்தார்.

மேலும் சிலர், இந்தியாவைப் பற்றி ஆதாரமில்லாமல் தவறான செய்தி வெளியிட்டிருப்பதற்கு, அந்தச் செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர்.  இந்தியாவிலுள்ள ஆங்கில ஊடகங்கள் பலவும், இந்தக் கட்டுரைக்கு எதிர்வினை கட்டுரைகள் எழுதின.

இந்தியாவைப் பற்றி திரிக்கப்பட்ட செய்திகளை அளிப்பது ’நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்குப் புதிதல்ல. இதற்குமுன், இந்தியா வெற்றிகரமாக மாங்கல்யான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதை, கிண்டலாக கார்ட்டூன் ஒன்று வெளியிட்டிருந்தது. அதற்கு இந்தியர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கவும், நியூயார்க் டைம்ஸ் மன்னிப்பு கோரியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, வெளிநாடு ஊடகங்கள், இந்தியாவைப் பற்றி பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறது என்று அவ்வப்போது சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், உலகப் பத்திரிகை துறையில் நம்பகமான ஊடகமாக கருதப்படும் ‘நியூயார்க் டைம்ஸ்’ இப்படி ஒரு செய்தி வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்