வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (20/11/2017)

கடைசி தொடர்பு:19:30 (20/11/2017)

அருணாசலப்பிரதேசத்தில் ஜனாதிபதி! : சீற்றத்தில் சீனா

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் அருணாசலப்பிரதேச வருகை சீனாவை சீண்டியுள்ளது.

ராம்நாத்

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அருணாசலப்பிரதேசம் சென்றிருந்தார். ஜனாதிபதியின் இந்தப் பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லூ காங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா- சீனா இடையே நிலவும் இருதரப்பு உறவு சிக்கலில் சிக்கியிருக்கும் நிலையில் இந்தியா அதை மேலும் சிக்கலாக்காமல் இருக்க வேண்டும். தெற்கு திபெத்தைப் பொறுத்த வரையில் எங்களது நிலைப்பாட்டில் சீனா எப்போதும் உறுதியாகவே உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அருணாசலப்பிரதேசம் சீனாவால் “தெற்கு திபெத்” என்றழைக்கப்படுகிறது. இந்தியத் தலைவர்கள் அருணாசலப்பிரதேசம் வருவதற்கு சீனா தொடர்ந்து கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. லூ காங் கூறுகையில், “இந்திய- சீன உறவு சிக்கலில் இருக்கும் சூழலில் இந்தியத் தலைவர்கள் இதுபோன்ற எல்லைப் பகுதிக்குள் வருவதை சீனா கடுமையாகக் கண்டிக்கிறது. பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியா- சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னை விரைவில் தீரும் என எதிர்பார்க்கிறோம்” எனக் கூறினார்.