வடகொரியாவிலிருந்து தப்பிக்க முயன்ற ராணுவ வீரருக்கு நிகழ்ந்த சோகம்..!

வடகொரியாவிலிருந்து தப்பித்து தென்கொரியாவுக்குச் செல்ல முயன்ற ராணுவ வீரரை, எல்லையில் சக நாட்டு ராணுவ வீரர்களே சரமாரியாகச் சுட்டுள்ளனர். தென்கொரிய வீரர்கள் அவரை மீட்டு மருத்துமனையில் சேர்த்துள்ளனர். அதுசம்பந்தமான வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.

வடகொரியா

 

1950 முதல் 1953-ம் ஆண்டு வரை மூன்றாண்டுகள் கொரியப்போர் நடைபெற்றது. போருக்குப் பின்னர் கொரியா, வடகொரியா, தென் கொரியா என இரண்டு நாடுகளாகப் பிரிந்தது. வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. தென்கொரியா ஜனநாயகத்துக்கு மாறிவிட்டது. வடகொரியாவில் அடக்குமுறை அதிகமாக இருப்பதாகக் கருதும் மக்கள், அங்கிருந்து தப்பித்து தென்கொரியாவுக்குச் சென்று வருகிறார்கள். அந்தவகையில் 1953-ம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 30,000 பேர் தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சீன எல்லை வழியாகத் தென் கொரியாவுக்குள் நுழைகின்றனர். தங்கள் நாட்டுக் குடிமக்களை மூளைச்சலவை செய்து தென்கொரியா கடத்தி வருவதாக வடகொரியா குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், வடகொரியாவிலிருந்து தென் கொரியாவுக்கு நுழைய முயன்ற வடகொரிய ராணுவ வீரர் மீது அந்நாட்டுப் படைகளே சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் அமெரிக்கா தலைமையில் செயல்பட்டு வரும் ஐ.நா படை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

 

 அந்த வீடியோவில், வடகொரியா ராணுவ வீரர் ஒருவர் ஜீப் மூலம் எல்லையைக் கடக்க முயற்சிக்கிறார். அவர் எல்லைக் கோட்டை தொடும் நேரத்தில் அங்கு நிற்கும் வடகொரிய வீரர்கள் அவரைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். அவர் ஜீப்பை விட்டு வெளியேறி ஓடும் போதும் துப்பாக்கிச்சூடு தொடர்கிறது. இதில் அந்த நபர் துப்பாக்கிக்குண்டு காயங்களுடன் மயங்கிச் சரிகிறார். இதை சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கும் தென் கொரிய வீரர்கள் பார்க்கிறார்கள். உடனே அவர்கள் விரைந்து சென்று குண்டுக்காயம் பட்ட நபரை தங்கள் எல்லைக்குள் இழுத்து வருகிறார்கள். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அப்போது வடகொரிய வீரர்களுக்கும், தென்கொரிய வீரர்களுக்கும் துப்பாக்கிச்சண்டை வெடிக்கவில்லை.

ராணுவ வீரரைக் குறிவைத்து மொத்தம் 5 நிமிடங்கள் வடகொரிய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். மொத்தம் 40 ரவுண்டுகள் சுட்டுள்ளனர். அதில் 5 குண்டுகள் அந்த ராணுவ வீரர் மீது பாய்ந்துள்ளது. காப்பாற்றப்பட்ட ராணுவ வீரர் இரண்டு கட்ட அறுவை சிகிச்சைப் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், இதுபற்றிய செய்தி எதையும் வடகொரிய ஊடகம் இதுவரை வெளியிடவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!