வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (22/11/2017)

கடைசி தொடர்பு:20:10 (22/11/2017)

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி ஹபீஸ் சயீத் வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை

மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜமாத்-உத்-தவா இயக்கத்தலைவர் ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹபீஸ் சயீத்

 

2008 நவம்பர் 26-ம் தேதி கடல் மார்க்கமாக மும்பையில் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டார்கள். இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தவர் ஹபீஸ் சயீத். இவர் மீதானக் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தத்துக்குப் பிறகு பாகிஸ்தான் பணிந்தது. அமெரிக்க அரசு ஜவாத்-உத்-தவாவை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது. ஹபீஸ் சயீத்துக்கு ஒரு கோடி டாலர் விலையையும் அறிவித்தது.

சர்வதேச நாடுகளின் தொடர் அழுத்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு கடந்த ஜனவரி 31-ம் தேதி ஹபீஸ் சயீதை கைது செய்தது. அவருடைய கூட்டாளிகள் அப்துல்ல உபைத், மாலிக் ஜாபர் இக்பால், அப்துல் ரஹ்மான் அபித், குயாஸி காசிப் ஹூசைன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். 

கடந்த மாதத்தில் ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவலை மேலும் ஒருமாதம் நீட்டித்தது நீதிமன்றம். இதற்கிடையே, ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவலை நீட்டிக்க விருப்பம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில் இன்று பஞ்சாப் மாநில நீதிமன்ற மறுபரிசீலனை வாரியம் ஹபீஸ் சயீதின் வீட்டுக்காவலை விலக்கி உத்தரவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அவர் விடுதலையாக இருக்கிறார்.