வெளியிடப்பட்ட நேரம்: 21:34 (22/11/2017)

கடைசி தொடர்பு:11:10 (23/11/2017)

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி சேகரிப்பு... தமிழ் இருக்கை எழுச்சி கீதம் வெளியீடு!

கடந்த சனிக்கிழமை மாலை ரொறொன்ரோவில் தமிழ் இருக்கை எழுச்சி கீதம் அரங்கேறியது. அப்போதே, அந்தப் பாடல் உலக மக்களுக்காக வெளியிடப்பட்டது. பாடலை எழுதியவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். அதற்கு இசையமைத்தவர் ’பண்ணையாரும் பத்மினியும்’, ’ஒருநாள் கூத்து’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன். பாடியவர் சூப்பர் சிங்கர் ஜெஸிக்கா ஜூட். 

பாடல் வெளீயீட்டின்போது

பேராசிரியர் டேவிட் ஷுல்மன், தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய சிறப்பு இலக்கியப் பரிசை பெறுவதற்காக ரொறொன்ரோ வந்திருந்தார். விருதை வழங்கிய பின்னர் அவர் முன்னிலையிலே பாடல் அதே மேடையில் வெளியானது. பாடலை வெளியிட்ட பின்னர் ஜெஸிக்கா ஜூட் தொடர்ந்து அரவிந்தன் இசைக்குழுவுடன் பல பாடல்களைப் பாடினார். சபையினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். இசை நிகழ்ச்சி மூலம் அன்று சில மணி நேரங்களில் திரட்டிய பத்தாயிரம் டாலர்களும் ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அது தவிர, ஏறக்குறைய 15,000 டாலர்கள் உலகத்து பல மூலைகளிலிருந்து ரசிகர்களால் தமிழ் இருக்கைக்கு இணையம் மூலம் நேரடியாக அனுப்பப்பட்டது பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து நன்கொடைகள் வந்துகொண்டே இருக்கின்றன. உலகத்து ரசிகர்கள் பாடலை யூடியூபில் https://m.youtube.com/watch?v=vcTNtXIB6M8 கேட்கலாம். நன்கொடை வழங்க விரும்புபவர்கள் harvardtamilchair.org இணையதளத்துக்குச் சென்று donate பட்டனை அமுக்குவதன் மூலம் அதைச் செய்யலாம். பாடல் ’உலகத் தமிழர்க்கோர் தமிழ் இருக்கை’ என்றுதான் ஆரம்பிக்கிறது. 

அ.முத்துலிங்கம்