வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (23/11/2017)

கடைசி தொடர்பு:16:15 (23/11/2017)

வடகொரியாவுக்கு விமானப் போக்குவரத்து ‘கட்’- சீனா அதிரடி!

வடகொரியாவுக்கான விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்துவதாக சீனா அறிவித்துள்ளது.

சீனா

வடகொரியா - அமெரிக்கா இடையே இருக்கும் புகைச்சல் உலகறிந்த ஒன்றுதான். அமெரிக்கா மற்றும் ஐ.நா உள்ளிட்ட அமைப்புகளுக்குப் பணியாமல் தொடர்ந்து முரண்டுபிடித்துவருகிறது வடகொரியா. அதேநேரத்தில், எப்படியாவது வடகொரியாவுக்கு கிடுக்குப்பிடி போட்டு கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று அமெரிக்காவும் முயன்று வருகிறது. இந்த வகையில் சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அங்கு வடகொரியாவுக்கு எதிராக சீனாவின் ஆதரவை திரட்டியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது வடகொரியாவுக்கான விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்துவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க- சீனப் பிரச்னையின் காரணமாக என்று வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், சீனா, ’வடகொரியாவுக்கான விமான சேவையில் போதிய அளவிலான பயணிகள் பயணம் செய்வதில்லை என்பதால், வணிக ரீதியாக விமான சேவையை நிறுத்துகிறோம்’ என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், பின்னணியில் பல அரசியல் காரணங்கள் இருக்கிறது என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.