மோடி - ட்ரம்ப் மகள் டின்னர்.... எப்படி தயராகிறது ஃபலுக்னாமா அரண்மனை?

மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் உலக தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஹைதராபாத் வரவிருக்கிறார். அவரின் வருகைக்காக, ஒட்டுமொத்த ஹைதராபாத் நகரமும் பரபரப்பாக இயங்கி வருகிறது. பிச்சைக்காரர்கள் நகரை விட்டு அகற்றம், நகரில் திறந்து கிடந்த சாக்கடைகளை மூடுவது, புதிய சாலைகள் அமைப்பது என ஒட்டுமொத்த நகரையும் மாற்றி வருகின்றனர் அதிகாரிகள். இதை இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் மேற்பார்வையிட்டுக் கவனித்து வருகிறது. இவான்காவின் பாதுகாப்புக்குத் தேவையான அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவான்கா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இரவு உணவின்போது சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்தச் சந்திப்பு நடக்கும் ஹோட்டல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இவான்கா ட்ரம்ப் தங்கவிருக்கும் அரண்மனை

1893-ம் ஆண்டு கட்டப்பட்ட ஃபலுக்னாமா அரண்மனையில்தான் மோடி - இவான்கா சந்திப்பு நடக்கவுள்ளது. இந்த அரண்மனையை 10 ஆண்டுகளாக தாஜ் ஹோட்டல் நிர்வகித்து வருகிறது. இந்த ஹோட்டலில் உள்ள தேள் வடிவிலான 101 பேர் அமர்ந்து உணவு அருந்தும் டைனிங் ஹாலில்தான் இந்தச் சந்திப்புநடக்கவுள்ளது. இதுதான் உலகின் மிகப்பெரிய டைனிங் ஹால் என்று தெரிகிறது. இந்த அரண்மனை இத்தாலிய கலை நுணுக்கங்களோடு கட்டப்பட்டது. குதிரை வண்டியில் வரவேற்பு, ஆடம்பர உள்கட்டமைப்பு என நூற்றாண்டு கடந்த பெருமைகளைத் தாங்கி நிற்கிறது ஃபலுக்னாமா அரண்மனை.

கிராண்ட் டின்னர் :

கிராண்ட் டின்னர்

பிரதமர் மோடி - இவான்கா உடன் அமர்ந்து உணவு சாப்பிடவிருக்கும் 101 பேர் யார் என்ற விவரங்கள் பெறப்பட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஹைத்ராபாத் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். இன்னொரு திறந்தவெளிப் பகுதியில் 2,000 பேருக்கு அதே சமயத்தில் டின்னர் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோடியை சந்திப்பதற்கு முன் இவான்கா, உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின் ஹைதராபாத்தின் புராதனச் சின்னமான சார்மினாரைப் பார்வையிடுகிறார். இதே நேரத்தில் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். செவ்வாய்க்கிழமை காலை இவான்கா இந்தியா வந்தது முதல், அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பும் வரை உயர்மட்டப் பாதுகாப்பில் ஹைதராபாத் நகரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாதுர்யமாக சமாளித்த இவான்கா !

அரண்மனை

தனது இந்தியப் பயணம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக இவான்கா தெரிவித்துள்ளார். மோடி - டிரம்ப் குறித்த கேள்விக்கு அவர் மிகவும் சாதுர்யமாக பதிலளித்துள்ளார். "டிரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையும், மோடியின் 'மேக் இன் இந்தியா' கொள்கையும் மாறுபட்டுள்ளதே" என்ற கேள்விக்கு "இரண்டும் கொள்கை ரீதியாக மாறுபட்டவை. ஆனால் அது எந்தவிதத்திலும் மோடி - ட்ரம்ப் உறவைப் பாதிக்காது. இந்தியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்" என்று பதிலளித்துள்ளார்.

புதிதாக எதுவும் செய்யவில்லை!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் மகள் இவான்காவின் வருகைக்காக ஹைதராபாத்தில் புதிய சாலைகள் போடப்பட்டிருப்பது, பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தியது குறித்து விளக்கமளித்துள்ள போலீஸார், "இந்தத் திட்டங்கள் எல்லாம் ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டவை. இந்த மாநாட்டுக்காக புதிதாக ஒன்றும் செய்யவில்லை. பிச்சைக்காரர்கள் இல்லா நகரம் என்ற திட்டத்தின்கீழ் பிச்சைக்காரர்கள் அகற்றப்பட்டு, அவர்கள் மேம்பாட்டுக்கு வழிவகை செய்யும் திட்டம் நடைமுறையில்தான் உள்ளது" என்று கூறியுள்ளனர். டிரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா தொடர்பான ஒரு முக்கிய நிகழ்வாக டிரம்பின் மகள் - மோடி சந்திப்பு அமைந்துள்ளது. இந்தப் பயணம் டிரம்ப்-ன் இந்தியா வருகையை தீர்மானிக்க ஏதுவாக இருக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. டிரம்ப் மகளுக்கே இவ்வளவு ஏற்பாடுகள் என்றால் டிரம்ப் வந்தால்....

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!