பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழிப்பு நாளன்று மிராபெல் சகோதரிகளை நினைவுகூர்வோம் ! #EliminationOfCrimeAgainstWomen | Let us remember Mirabal sisters on this day #EliminationOfCrimeAgainstWomen

வெளியிடப்பட்ட நேரம்: 21:26 (25/11/2017)

கடைசி தொடர்பு:21:26 (25/11/2017)

பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழிப்பு நாளன்று மிராபெல் சகோதரிகளை நினைவுகூர்வோம் ! #EliminationOfCrimeAgainstWomen

பெண்

'ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 25 அன்று பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கு எதிரான நாள்' என்று 1999-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இது, மிராபெல் சகோதரிகளை நினைவுகூறும் நாளாகவும் போற்றப்படுகிறது. இந்த மிராபெல் சகோதரிகளின் கதை, கண்ணீா் கலந்த புரட்சி காவியம். 

1930 - 38, 1942 - 61 க்குட்பட்ட ஆண்டுகளில், ரஃபேல் ட்ருஹியா என்பவா் டொமினிக் குடியரசு நாட்டின் அதிபராகப் பதவி வகித்துவந்தார். வெளியுலகுக்குத் தன்னை நல்லவராகக் காட்டிக்கொண்டு நாட்டின் வளங்களைச் சூறையாடினார். அவரை எதிர்ப்பவர்களைக் கொலை செய்வதற்காக 'தி 42' என்ற பெயரில் தனிக் கூலிப்படையே வைத்திருந்தார். இதை எதிர்த்து மிராபெல் சகோதரிகள் போராடினா். இவா்களின் பெயா் மாரியா தெரஸா மிராபெல், மினா்வா மிராபெல், பேட்ரியா மிராபெல். மிராபெல் என்பது இவா்களின் குடும்பப் பெயர். 'தி42' குழுவினா் சில பெண்களைக் கொலை செய்வதை நேரில் பார்த்த பேட்ரியா, பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார். இந்தச் சகோதரிகளுக்குப் பெருகும் ஆதரவைக் கண்டு, அதிபா் ரஃபேல் கோபமானார். இனியும் இவர்களை விட்டுவைத்தால் தன் பதவிக்கு ஆபத்து வரும் என, அவர்களைக் கொல்லத் திட்டமிட்டார். 

பெண்கள்

சிறையில் இருக்கும் சக போராட்ட வீரர்களைச் சென்று சந்திப்பது இந்தச் சகோதரிகளின் வழக்கங்களில் ஒன்று. அப்படி ஒருமுறை சந்திப்பு முடிந்து திரும்பியபோது, ரஃபேல் ட்ருஹியாவின் ஆள்கள் இவர்களைக் கொன்றுவிட்டார்கள். அதை விபத்துபோல ஜோடிக்க, இறந்த சடலங்களை அவர்களின் காருக்குள் வைத்து மலையிலிருந்து தள்ளிவிட்டனா். இது நடந்தது 1960-ஆம் ஆண்டு. இந்த உண்மையும் ட்ருஹியோவின் மரணத்துக்குப் பின்னா்தான் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தச் சகோதரிகளின் வாழ்க்கையை மையமாகவைத்து 'இன் தி டைம்ஸ் ஆஃப் பட்டா்ஃபிளை' என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. 

ஒவ்வொரு நாளும் பெண்கள்மீது தொடுக்கப்படும் வன்முறைகளும், அவா்களுக்கு எதிரான குற்றமும் அதிகரித்துவருகிறது. சமீபத்திய ஆய்வின்படி, உலகில் மூன்றில் ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒருமுறையெனினும் வன்புணர்வு தொல்லைக்கு ஆளாகிறார். ஆண், பெண் இருபாலரும் உடலமைப்பால்தான் வேறுட்டு இருக்கின்றனர். மற்ற விஷயங்களில் பெண் என்பவள், ஆணுக்குச் சற்றும் குறைவில்லை. ஒரு நாட்டில் பெண்கள் எப்போது பாதுகாப்பை உணர ஆரம்பிக்கின்றனரோ அப்போதுதான் அது சிறந்த நாடு என்கிற தகுதியைப் பெறுகிறது. பெண்கள், தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எந்தக் காரணத்துக்காகவும் மறைக்காமல், தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும். ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், யாரோ ஒருவரின் தாயாகவோ, சகோதரியாகவோ இருக்கிறார் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் பதியவேண்டும். தங்கள் சகோதரிக்கு நடக்கும் வன்கொடுமையைச் சமூகத்துக்கு அஞ்சி மறைக்காமல், குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுதர குடும்பத்தாரும் முன்வர வேண்டும். அது, பெண்களிடம் நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும். அது, அவர்களை நட்சத்திரமா ஜொலிக்கச் செய்யும். 

பெண்கள்

‘உலகம் ஆரஞ்சுமயமாகட்டும்’ என்று ஐநா பெண்கள் அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்துக்கட்டும் விதமாக ஐ.நா. அறிவித்துள்ள நவம்பர் 25 தொடங்கி உலக மனித உரிமை நாளான டிசம்பர் 10 வரை 16 நாட்கள் பெண்களின் உரிமைகளுக்காக உலகெங்கும் ஆரஞ்சு வண்ணத்தில் அதிரடியாய் ஆர்ப்பரிப்போம் என்று அந்த அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

வரதட்சணை ஒழிப்புச் சட்டம் தொடங்கி, குடும்ப வன்முறை சட்டம், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்புச் சட்டம், அண்மையில் கொண்டுவரப்பட்ட நிர்பயா சட்டம் வரை நிறைய சட்டங்கள் இருக்கின்றன. இன்னும் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற முன்மொழிவும் இருக்கிறது. இத்தனை சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.     

இப்போது உலகெங்கும் உயிர்வாழும் பெண்களில் ஏறத்தாழ 12 கோடிப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள். 30 நாடுகளில் வாழும் 20 கோடிப் பெண்கள் ஐந்து வயதுக்கு முன்பே பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டவர்கள் (female genital mutilation), ஏறத்தாழ 75 கோடிப் பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் பட்டியலில் 35 விழுக்காடு பெண்கள் தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினர்களாலேயே துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் 2012 இல் கொலை செய்யப்பட்ட பெண்களில் பாதிப்பேர் குடும்ப உறுப்பினர்களால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதே ஆண்டில் குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்ட ஆண்கள் 6% விழுக்காடுதான் என்று ஐ.நாவின் அறிக்கை ஒன்று ஆய்வு சொல்கிறது.

பெண்கள்

பெண்ணை அன்னையாய், பாட்டியாய், அத்தையாய், அக்காவை, அண்ணியாய், தங்கையாய்க் கொண்டாடும் ஆண்கள் அதேவேளையில் அவர்களை பாலுறவுக்காவும், சொத்துக்காகவும் துன்புறுத்துவதும் கொலை செய்வதும் ஏன் நிகழ்கிறது? இன்னும் மாமியாராக, நாத்தனாராக, பெண்களே பெண்களுக்கு எதிரியாவதும் குடும்பங்களில் நிகழ்கிறதல்லவா? பெண்ணை முதன்மையாகக் கொண்டு இயங்கிய பழங்கால சமுதாயத்திற்குப் பின்வந்த சமுதாயங்கள் எல்லாவற்றிலும் நாம்  பெண்ணை அடிமையாக, அழகுப் பதுமையாக,  இன்பம் துய்க்கும் நுகர்வுப் பொருளாகவே பார்க்கும் போக்கை ஊக்குவித்து வந்துவிட்டோம் . உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரை குடும்பத்திலும், வேலை செய்யும் இடங்களிலும் என்று இரட்டைச் சுரண்டலுக்கும், இரட்டைத் துன்புறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

ஆண் மைய சமுதாய அமைப்பு மாறாதவரை பெண்கள் மீதான வன்முறை முற்றாக ஒழியாது. ’ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லது ‘பெண்மை’ விடுதலை இல்லை என்பது உறுதி.  என தந்தை பெரியார் சொன்னதை இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். 

ஒவ்வொரு பெண்ணும் ஒரு பட்டாம்பூச்சி... அவர்கள் இந்த உலகில் சிறகு விரித்துப் பறக்க உரிமை உள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்