வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (26/11/2017)

கடைசி தொடர்பு:15:40 (26/11/2017)

நைஜீரியாவை உலுக்கும் போகோஹரம்: ஒரு மாநகரையே கைப்பற்றி அட்டூழியம்!

போகோஹரம் தீவிரவாதிகளின் தீவிரவாதச் செயல் பெருகி தற்போது நைஜீரியாவின் ஒரு மாநகரையே கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

போகோஹரம்

உலகிலேயே மிகவும் பயங்கரமான தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கே சவால் விடும் வகையில் சர்வதேச அளவில் மிகப்பெரும் பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்து வருகிறது போகோஹரம். ஆப்ரிக்க கண்டத்தில் பல தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றி வரும் போகோஹரம் தீவிரவாத இயக்கம் நைஜீரியாவில் தொடர் வன்முறை, கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது நைஜீரியாவின் ஒரு மாநகரையே கைப்பற்றி போகோஹரம் அமைப்பினர் சர்வதேச பாதுகாப்புக்கு சவால் விடுத்துள்ளனர்.

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாகாணத்திற்கு உட்பட்ட மகுமெரி நகரை தற்போது போகோஹரம் தீவிரவாதிகள் முற்றிலுமாகக் கைப்பற்றி உள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டு வருகின்றன. 2002-ம் முதல் செயல்பட்டு வரும் போகோஹரம் தீவிரவாத இயக்கம் விரைவில் அணு ஆயுதங்களைக் கையிலெடுத்து உலக நாடுகளைப் பணிய வைப்போம் என சவால் விடுத்து வருகின்றனர். மகுமெரி நகரில் நடத்தப்பட்டத் தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.