வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (29/11/2017)

கடைசி தொடர்பு:07:34 (29/11/2017)

அடங்க மறுக்கும் வடகொரியா..! மீண்டும் ஏவுகணைச் சோதனை

வடகொரியா, நேற்று மீண்டும் ஏவுகணைச் சோதனை நடத்தியிருப்பது, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வடகொரியா


உலக நாடுகளின் எச்சரிக்கையையும், ஐ.நாவின் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளது. 

இந்த ஏவுகணைச் சோதனைகள், அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இந்த விஷயத்தில் கடும் மோதல் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஆகியோர் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று வடகொரியா மீண்டுமொரு ஏவுகணையைப் பரிசோதித்துப் பார்த்துள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் இந்த ஏவுகணை வீசப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவும் இதை உறுதிசெய்துள்ளது.
 
ஏவுகணைச் சோதனையைக் கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'வடகொரியாவை கவனித்துக்கொள்கிறோம்' என்று கூறியுள்ளார். வடகொரியாவின் இந்தச் செயல், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.