வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (29/11/2017)

கடைசி தொடர்பு:14:00 (29/11/2017)

`லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா அமைப்புகளுக்கு நான் ஆதரவாளன்' - பரபரப்பைக் கிளப்பும் முஷரப்

`லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தவா போன்ற அமைப்புகளுக்கு நான் மிகப் பெரிய ஆதரவாளன்' என்று கூறி, பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த இரு அமைப்புகளும் உலக அளவில் தீவிரவாத அமைப்புகளாக அறியப்பட்டுள்ளது. 

முஷரப்

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவரும், ஜமாத்-உத்-தவா அமைப்பின் நிறுவனருமான ஹபீஸ் சயீத். அந்நாட்டு அரசு, வீட்டுக்காவலிலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்னர் அவரை விடுவித்தது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த அமைப்பைப் பற்றி கருத்து கூறியுள்ளார் முஷரப்.

முஷரப், `லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தவா போன்ற அமைப்புகளுக்கு நான் மிகப் பெரிய ஆதரவாளன். அவர்களுக்கும் என்னைப் பிடிக்கும். என்னை ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள், காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக அரங்கேற்றும் செயல்களுக்கு நான் எப்போது இசைவு கொடுத்தே வந்துள்ளேன். அவர்கள்தான் காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிரான வலிமை வாய்ந்தவர்கள். இந்த அமைப்புகளை தீவிரவாத அமைப்புகளாக இந்தியா, அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து அறிவிக்கச்செய்துள்ளது' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.