சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி முன்னே போர்க்குற்றவாளி விஷமருந்தி தற்கொலை!

யுகோஸ்லேவியா பிரிவினையின்போது, போஸ்னிய முஸ்லிம் மக்களைக் கொன்று குவித்து போர்க்குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட குரோஷிய முன்னாள் ராணுவ தளபதி ஸ்லோபதான் ப்ரால்ஜாக், சர்வதேச நீதிமன்றத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். 

போர்க்குற்றவாளி தற்கொலை

இந்த வழக்கில் நெதர்லாந்தில் உள்ள திஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பை வாசித்தபோது, ஆவேசப்பட்ட ஸ்லோபதான், ''நான் போர்க்குற்றவாளி இல்லை. தீர்ப்பை நான் மறுக்கிறேன்'' என்றார். பின்னர்,. தன் பையில் வைத்திருந்த விஷப்பாட்டிலை எடுத்து நீதிபதி முன்னே குடித்தார். நீதிபதியைப் பார்த்து 'இப்போது நான் குடித்தது விஷம்' என்று கத்தினார்.

அதிர்ச்சியடைந்த நீதிபதி, நீதிமன்ற நடவடிக்கையை ரத்து செய்வதாகக் கூறி, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். ஆம்புலன்ஸில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஸ்லோபதான் உயிரிழந்தார். குரோஷிய அரசும் ஸ்லோபதான் இறப்பை உறுதி செய்துள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு யூகோஸ்லேவியா நாடு உடைந்தபோது, 1992-94-ம் ஆண்டு காலகட்டத்தில் குரோஷியாவை விரிவுபடுத்தும் வகையில் போஸ்னியா வாழ் முஸ்லிம் மக்களைக் கொலை செய்ததாகவும் பெண்கள், சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் குரோஷியாவின் ராணுவத் தளபதியாகவும் ராணுவத் துணை அமைச்சராகவும் ஸ்லோபதான் இருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கடந்த 2013-ம் ஆண்டு இவர் உள்பட 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!