வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (04/12/2017)

கடைசி தொடர்பு:22:00 (04/12/2017)

நீங்கள் செய்யாவிட்டால்... நாங்கள் முடிவு கட்டுவோம்! பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மிரட்டல்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் புகலிடங்களைப் பாகிஸ்தான் அழிக்காவிட்டால், அமெரிக்கா அதைச் செய்யும் என்று அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.

டிரம்ப்

 

பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அங்கு பயங்கரவாதிகள் மிக எளிதாகப் பொதுவெளியில் நடமாடி வருவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் கூறிவருகின்றன. பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அரசே புகலிடம் அளித்து வருவதாகப் புகார்கள் இருக்கின்றன. 

அமெரிக்க அரசு இதைப் பலமுறை கண்டித்துள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களின் புகலிடங்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகப் பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுதோறும் நிதியுதவியும் அளித்து வருகிறது. 
இந்நிலையில், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-யின் தலைவர் மைக் பாம்பியோ சிகாகோவில் பேசும்போது, “பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழித்தொழிக்கப் பட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமும். பாகிஸ்தான் இதைச் சாதிக்கத் தவறினால், அமெரிக்கா அதைச் செய்யும். பயங்கரவாதிகளின் புகலிடங்களுக்கு முடிவு கட்டப்படும்” என்றார்.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தற்போது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் இது சம்பந்தமாக பாகிஸ்தான் அரசிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.