"ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புடன் கூட்டணி வைக்கத் தயார்”: முஷரஃப்

"ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புடன் கூட்டணி வைக்கத் தயார்” என பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஷ் முஷரஃப் தெரிவித்துள்ளார்.

முஷாரஃப்

கடல் வழியாக மும்பை வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரத் தாக்குதலை நடத்தினர். அந்தத் தாக்குதலில், 6 அமெரிக்கர் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதச் செயலுக்கு மூளையாக செயல்பட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீத் என்று புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து அறிவித்தது. தற்போது, ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பை நடத்திவரும் ஹபீஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.65 கோடி என்று விலை நிர்ணயித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிலும் ஹபீஸ் சயீத்தை சர்வதேசப் பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்துள்ளது. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஹபீஸ் சயீத்தை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. 

ஆனால், கடந்த 10 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹபீஸ் சயீத் மீதான காவல், சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை ஆத்திரம்கொள்ளவைத்தது. அமெரிக்கா கொடுத்த நேரடி அழுத்தத்தால், ஹபீஸ் சயீத் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 

இந்நிலையில், பயங்கரவாதியாக அடையாளம் காணப்படும் ஹபீஸ் சயீத் உடன் அரசியல் ரீதியான கூட்டணி அமைக்கத் தயார் என பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஷ் முஷரஃப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இதுகுறித்த தகவலை முஷரஃப் அறிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!