வெளியிடப்பட்ட நேரம்: 08:13 (07/12/2017)

கடைசி தொடர்பு:14:14 (07/12/2017)

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் ட்ரம்ப்!

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக நேற்று அங்கீகரித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். விரைவில் அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்படும் எனவும் அறிவித்தார். 

ட்ரம்ப்


நீண்ட காலமாக இருந்து வந்த ஜெருசலேம் விவகாரத்தில், அதிபர் ட்ரம்ப் நேற்று அதிரடி முடிவுகளை அறிவித்தார். ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் உரிமை கொண்டாடிவரும் நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “இந்த முறை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிறேன். எனக்கு முன்னால் இந்தப் பதவியில் இருந்தவர்கள், இதை செய்வதாக வாக்கு மட்டுமே அளித்தனர். ஆனால், செய்தது கிடையாது” என்றார்.  இதன்மூலம், ஜெருசலேம் இஸ்ரேலின் ஒரு பகுதிதான் என அமெரிக்க அறிவிப்பதாக உள்ளது.

கடந்த அமெரிக்கத் தேர்தலின்போது அதிபர் ட்ரம்ப், இந்த வாக்குறுதியை அளித்திருந்தார். முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன் முதல் ஜார்ஜ் புஷ் வரை பல அதிபர்கள் இதுபோன்ற வாக்குறுதிகளை அளித்திருந்தாலும் அதை அவர்கள் செய்யவில்லை. 

மேலும் ட்ரம்ப், விரைவில் அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றும் வேலைகள் துவங்கும் எனவும் அறிவித்தார். ஆனால், இது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பிளவை அதிகரிக்கும் என உலகின் பல பகுதிகளிலிருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் இருநாடுகளிடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.