வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (07/12/2017)

கடைசி தொடர்பு:16:51 (07/12/2017)

“கணவருடன் சண்டை வரும்!” இவான்கா ட்ரம்பை எச்சரிக்கும் யூ-டியூப் ஜோதிடர்

இவான்கா ட்ரம்ப்

இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிக்கும், டிசம்பரில் சென்னை வெள்ளத்தில் மூழ்கும், 7வது இடத்துல சனி பாக்குறதுனால இந்தியா சனி கிரகத்துக்கு ராக்கெட் விடும்னு ஜோதிடர்களை அதிகம் பார்க்க முடியும். அப்படி ஒரு ஜோதிடர்தான் இப்போது இந்தியா வந்த இவான்கா ட்ரம்ப் பற்றி கணித்து மாஸ் காட்டியுள்ளார். ஒரு கரும்பலகையில் கட்டம் போட்டு இவான்கா வாழ்க்கையைப் பற்றி கணித்துச் சொல்லி இணையத்தில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

வேணு சுவாமி எனும் ஹைதராபாத் ஜோதிடர் பிரபலங்களைக் கணிப்பதில் நிபுணராம். குறிப்பாகப் பெண் பிரபலங்களுக்கு பல ஜோதிட கணிப்புகளை வழங்கி தன் யூ-டியூப் சேனலில் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வரிசையில் இவரது கையில் கிடைத்திருக்கும் தற்போதைய சென்சேஷன் ட்ரம்ப் மகள் இவான்கா. 

இவாங்கா ட்ரம்ப்பின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை வைத்து அவருடைய எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லி இருக்கின்றார். 

ஒரு வீடியோவில் நல்ல மஞ்சள் வேட்டி – சட்டை சகிதம், ஒரு கரும்பலகையில் இவான்காவின் ஜாதகத்தை வரைந்து கட்டம் கட்டி சொல்கிறார். ட்ரம்புக்கும் இவான்காவுக்குமான உறவு, அவரது தந்தையின் திருமணங்கள், இவான்காவின் மண வாழ்க்கை, குழந்தைகள், பொதுவெளி, உடல்நலம் என எல்லாப் பிரிவிலும் இவான்கா ஜாதகத்தை எடுத்து அலசியிருக்கிறார். 

சில வியக்கத்தக்க, ஆச்சர்யமான சற்று அதிர்ச்சியான கணிப்புகளைத் தருகிறார். அவற்றில் சில 

* அவருடைய வேலைபளு காரணமாக அவருக்கு முதுகுவலி ஏற்படும். அதிக பயணம் மேற்கொள்வார். 

* தம்பதியர் மத்தியில் சலசலப்புகள் ஏற்படும். திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2021இல் சில பிரச்னைகள் ஏற்படும். அதனால் இவான்கா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 2009ம் ஆண்டு ட்ரம்ப் மகளுக்குத் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

* ட்ரம்ப் அதிபராக இவான்காவின் ஜாதகம்தான் காரணம் இல்லையென்றால் ட்ரம்ப் அதிபராகவே ஆகியிருக்கமாட்டார் என்கிறார்.

இதற்கு முன்பு, இவர் நாகசைதன்யா – சமந்தா திருமணம், எதிர்கால தெலுங்கு முதலமைச்சர்கள், அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் சர்ச்சை, ரேவந்த் ரெட்டியின் அரசியல் பிரவேசம் என்று கணிக்க முடியாத பல செய்திகளைக் கணித்துக் கூறியவராம்.

இவான்கா ட்ரம்ப்பின் ஹைதராபாத் வருகைக்குப் பிறகு, அவருடைய ஜாதகம் குறித்து ஆழமான ஆராய்ச்சிகளைச் செய்து இந்தக் கணிப்புகளைக் கூறியுள்ளாராம்.

 

 

இவான்கா ட்ரம்ப்புக்கு இதெல்லாம் தெரியுமா பாஸ் என்று இணையத்தில் ஜோதிடருக்கு பதில்கள் வந்தாலும், இவரது வீடியோக்கள் வைரல் ரகம்தான். தேடிக் கண்டுபிடித்து இவரை தொடர்பு கொண்டால் ஒரு ஜோதிடம் கணித்துச் சொல்ல நான்காயிரம் என்கிறார் இந்த ட்ரெண்டிங் ஜோதிடர்.