வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (07/12/2017)

கடைசி தொடர்பு:21:09 (07/12/2017)

பிரிட்டன் பிரதமரைக் கொல்ல சதி! கைதானவர்களின் திட்டம் என்ன!?

பிரிட்டன் பிரதமர் தெரஸா மே

பிரிட்டன் பிரதமர் தெரஸா மே-வைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இருவரை லண்டன் நகர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.

பிரிட்டன் பிரதமராக தெரஸா மே பதவி வகித்து வருகிறார். இவர், லண்டனில் உள்ள எண் 10, டவுனிங் ஸ்டிரீட் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் லண்டனில் நவம்பர் 28-ம் தேதியன்று ஸகாரியா ரஹ்மான், அகியூப் இம்ரான் ஆகிய இரண்டு பேரை லண்டன் தீவிரவாதத் தடுப்பு போலீஸார் கைது செய்தனர். தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தெரஸா மே-வை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். கைதான இருவரும் சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் பிரிட்டன் பிரதமரின் வீட்டைத் தாக்கி, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கொலைச் சதியின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, அந்த நபர்கள் இருவரும் பிரிட்டன் பிரதமரின் இல்லத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களைப் பிடித்த போலீஸார், துருவித்துருவி விசாரணை நடத்தியதில் அவர்கள், தெரஸா மே-வைக் கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமரின் செய்தித்தொடர்பாளர், "கடந்த ஓராண்டில் மட்டும் ஒன்பது தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன" என்றார். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அகியூப் இம்ரான் (வயது 21) பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் ஸகாரியா ரஹ்மான் (வயது 20), பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ள பங்களாதேஷைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது. 

பிரிட்டன் பிரதமர் வீடுபிரிட்டன் பிரதமர் வீட்டின் கதவை வெடிகுண்டு வைத்துத் தகர்த்து, உள்ளே நுழைந்து, தெரஸா மே-வைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் வசமிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர, வேறு சில சதித்திட்டங்களில் ஈடுபடவும் அவர்கள் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. கைதான இருவருக்கும் ஐ.எஸ். தீவிரவாத  அமைப்புடன் தொடர்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரிட்டன் பிரதமரைக் கொலைசெய்ய அந்த இரு தீவிரவாதிகளும் போட்டிருந்த திட்டமும் இதன்மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வெளியாகும் அனைத்து பத்திரிகைகளும் இதனை பிரதான செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தச் சதியின் பின்னணியில் பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று ஸ்கை நியூஸ் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக தகவல் வெளியான போதிலும், அவர்களின் அடையாளர் பற்றி உறுதியாகத் தெரியவரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரையும் வரும் 20-ம் தேதி வரை காவலில் வைக்க வெஸ்ட்மினிஸ்டர் நீதிபதி உத்தரவிட்டார். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பிரிட்டன் பிரதமரின் டவுனிங் ஸ்டிரீட் இல்ல வாயிலில் குண்டுகளை வெடிக்கச் செய்தவுடன் ஏற்படும் பரபரப்புக்கு இடையே, பிரதமர் தெரஸா மே-யை மற்றொரு தீவிரவாதி கத்தியால் குத்திக் கொலை செய்வது என்பது அவர்களின் திட்டமாக இருந்துள்ளது. இதனை அவர்கள் போலீஸார் விசாரணையில் தெரிவித்ததாக, நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இந்த பயங்கரவாதச் செயல்களை திட்டமிட்டபடி நிறைவேற்ற இருவரில் ஒருவரான இம்ரான், வெளிநாடுகளுக்குச் செல்லவும் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் பிரிட்டன் பாதுகாப்புப் படையினர், இந்தத் தீவிரவாதத் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து, அதனைத் தடுத்து நிறுத்திவிட்டனர். 

மான்செஸ்டரில் கடந்த சில மாதங்களுக்கு முன் இசை நிகழ்ச்சியில் புகுந்து தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அதுபோன்றதொரு தாக்குதல் முறியடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே லண்டனில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களைப் போன்று, இந்தத் தாக்குதலையும் நடத்தி முடிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களின் முயற்சி இந்தமுறை பலிக்காமல் போய்விட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்