சவுதி அரேபியாவில் முதல் சினிமா தியேட்டர்! - 35 ஆண்டுக்கால தடை நீங்கியது | Saudi Arabia to re-open cinemas after 35-year ban

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (11/12/2017)

கடைசி தொடர்பு:16:30 (11/12/2017)

சவுதி அரேபியாவில் முதல் சினிமா தியேட்டர்! - 35 ஆண்டுக்கால தடை நீங்கியது

சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு தொடக்கம் முதல் திரைப்படங்கள் திரையிட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சவுதி பட்டத்து இளவரசர் சல்மான்

இந்த முடிவு சவுதியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அவ்வாட் அலாவட் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது. நாட்டில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்க புதிதாக ஓர் அமைப்பை உருவாக்கவும் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வாட் அலாவட், ‘சவுதியில் முதல் சினிமா தியேட்டர் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்படும். பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை ஆகிய காரணிகளின் அடிப்படையில் சினிமாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்றார். 

சவுதி அரேபியாவில் கடந்த 1980-ம் ஆண்டு முதல் சினிமா தியேட்டர்களுக்குத் தடை இருந்துவருகிறது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக சினிமாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சவுதி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் 300 சினிமா தியேட்டர்களைத் திறக்கவும், அதன்மூலம் 2,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக சல்மான் அறிவிக்கப்பட்ட பின்னர் தொடர்ச்சியாகப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடையை அண்மையில் நீக்கிய சவுதி அரசு, 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஊழல் புகாரில் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்த சம்பவமும் சவுதியில் நடந்தது.