வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (13/12/2017)

கடைசி தொடர்பு:13:22 (13/12/2017)

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆகப் பதிவு

ஈரானில் இன்று அதிகாலை, வலிமை வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவானது.

நிலநடுக்கம்

தென்கிழக்கு ஈரானின் கெர்மான் மாகாணத்தில், இன்று அதிகாலை மூன்று மணி அளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆகப் பதிவானது. ஈரான் ஊடகங்களின் தகவல்படி, ஹோடாக் நகர் அருகே நிலநடுக்கம் முதலில் உணரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்க புவியியல் அமைப்பு சார்பில், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 57 கி.மீ ஆழத்துக்கு தாக்கிய இந்த நிலநடுக்கத்தால், ஈரானின் முக்கிய நகரங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் இடிபாடுகளில் சிக்கி சுமார் 15 பேர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதேபோல, கடந்த திங்கள்கிழமையும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதமும் ஈரானில் 7.3 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து, நிலநடுக்கம் ஏற்படுவதால் உண்டாகும் பாதிப்புகளைச் சரி செய்வதில் அரசு தொய்வுடன் நடந்துகொள்வதாக, அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தற்போது குற்றம்சுமத்திவருகின்றனர்.