ஹார்வர்டைத் தொடர்ந்து தமிழுக்காக அமையும் இருக்கைகள்! - அசத்தும் வெளிநாடு வாழ் தமிழர்கள்

Stony brooke university

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான சூழல் நெருங்கிவரும் வேளையில் சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் பலவும் தமிழ் இருக்கை அமைக்க அனுமதி அளிக்கத் தொடங்கியுள்ளன. 'ஐரோப்பிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைய உள்ளன. இதற்கான முயற்சிகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்' என நெகிழ்கிறார் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான ஆலோசனைக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். 

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகத் தமிழர்கள் ஈடுபட்டு வந்தனர். அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன் உள்ளிட்டோர் இதற்கான முயற்சியில் இறங்கி, நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். தமிழ் இருக்கைக்காக 45 கோடி ரூபாயை ஹார்வர்டுக்கு அளிக்க வேண்டும் என்பதால், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதி உதவி கோரி தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வந்தனர். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடமும் தமிழ் இருக்கைக் குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர். அவரும் தமிழ் இருக்கைக்கு நிதி அளிப்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அடுத்து வந்த நாள்களில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. மாநில அரசின் நிதி உதவியும் கிடைக்காமல் போய்விட்டது. இந்நிலையில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜனைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர் ஹார்வர்டு தமிழ் இருக்கை குழுவினர். இதன் நீட்சியாக 10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஐந்து கோடி ரூபாய் வரையில் நிதி தேவைப்படுவதால் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான நிர்வாகக் குழுவினர், ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தன்.

பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி பல்கலைக்கழகங்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் தமிழுக்கென தனி இருக்கை அமைக்க முன்வந்துள்ளன. இதுகுறித்து நம்மிடம் விவரித்தார் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர் நம்மிடம் பேசும்போது, “அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டவர் பால சுவாமிநாதன்.

அமெரிக்கவாழ் தமிழரான பால சுவாமிநாதன் பல ஆண்டுகளாக ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கடும் முயற்சி எடுத்து வந்தார். அவரது கோரிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. அதேநேரம், ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கு உலகம் முழுவதும் குவியும் ஆதரவைக் கண்ட ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகமும் தமிழ் இருக்கை அமைய அனுமதி அளித்துள்ளது. இதனால், தற்போது தனது முழு முயற்சியால் தன் சொந்த செலவிலேயே ஸ்டோனி ப்ரூக்கில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் பால சுவாமிநாதன் வெற்றி கண்டுள்ளார். மேலும், கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவும் வாய்ப்பு அமைந்துள்ளது. இந்த முயற்சியில் வெளிநாடுவாழ் தமிழர் ஒருவர் தனி நபராக சுமார் 17 கோடி ரூபாயை நிதியாக அளித்துள்ளார். அதுகுறித்த தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறோம்" என்றார் நெகிழ்ச்சியுடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!