சொத்துகள் முடக்கப்பட எதிர்ப்பு: லண்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா வழக்கு | mallya opposes court's order of freezing his accounts

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (15/12/2017)

கடைசி தொடர்பு:14:45 (15/12/2017)

சொத்துகள் முடக்கப்பட எதிர்ப்பு: லண்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா வழக்கு

விஜய் மல்லையாவின் சொத்துகள் அனைத்தையும் உடனடியாக முடக்க வேண்டும் என்ற லண்டன் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜய் மல்லையா

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது. அப்படி கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட முயற்சியின்போது கைதான விஜய் மல்லையா, உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம், லண்டன் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு, உடனேயே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை, தலைமை மாஜிஸ்திரேட் எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணையில் மல்லையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `இந்த வழக்கு, அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் தொடரப்பட்டுள்ளது' என வாதாடினார். ஆனால், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஜய் மல்லையாவின் 10,000 கோடி ரூபாய் சொத்துகளை உடனடியாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், விஜய் மல்லையாவின் கைச்செலவுக்கு மட்டும் வாரம் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா தற்போது லண்டன் உயர் நீதிமன்றத்தில் உள்ள வணிக மன்றத்தில் எதிர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை வருகிற 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.