“ஹார்வி ஒரு ராட்சஷன்!” - நடிகை சல்மா ஹயேக் #உடைத்துப்பேசுவோம் #SpeakUp | Harvey weinstein is a monster says American Mexican actress Salma Hayek #MeToo

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (15/12/2017)

கடைசி தொடர்பு:11:18 (15/02/2018)

“ஹார்வி ஒரு ராட்சஷன்!” - நடிகை சல்மா ஹயேக் #உடைத்துப்பேசுவோம் #SpeakUp

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்ட்டன் பற்றி கடந்த அக்டோபர் மாதம் பாலிவுட் நடிகைகளும், தயாரிப்பாளர்களும் உடைத்துப் பேசியது, அதன் பின் நடந்த #MeToo கேம்பைன் நமக்குத் தெரிந்ததுதான். இரண்டு மாதங்களுக்குப் பின் ஹார்வியைப் பற்றி பேசியிருக்கிறார் மெக்ஸிகன் நடிகை சல்மா ஹயக். ஹார்வி என்கிற அரக்கனிடமிருந்து தப்பித்து, தன்னை நிரூபித்துக்கொள்ள, தான் அடைந்த துன்பங்களை பேசியிருக்கும் சல்மாவின் கதை முடியும் போது சல்மாவின் வெற்றி நம்முடைய வெற்றியாகத் தோன்றுகிறது. அதனுடைய சுருங்கிய மொழிப்பெயர்ப்பு இதோ.

சல்மா ஹயேக்

ஹார்வி ஒரு துணிச்சல்காரர்; திறமைகளை ரட்சிக்கும் புரவளர்; அன்பான அப்பா. ஆனால் ஹார்வி ஒரு ராட்சஷனும்கூட. பல ஆண்டுகள் என்னை ஆட்டிப்படைத்த ராட்சஷன் அவர்.

என்னை என்னுடைய தோழி ஆஷ்லே ஜூட் (முதலில் ஹார்வியைப் பற்றி பத்திரிகைகளில் பேசியவர்) உள்பட பல பத்திரிகையாளர்கள் ஹார்வி பற்றி பேசும்படி கேட்டார்கள். எதிலிருந்து நான் வெளியே வந்துவிட்டதாக நம்புகிறேனோ அதைப்பற்றி பேசக்கேட்டார்கள்.

நான் பேச வேண்டியது முக்கியமில்லை. ஏற்கெனவே, ஹார்வியின் பக்கங்களை பல பேர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துவிட்டார்கள் என்று நான் என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.

ஆனால், உண்மையில் நான் நிறைய பேரின் கேள்விகளில் இருந்து தப்பிக்க நினைத்தேன். நான் ஹார்வியால் வளர்க்கப்பட்டவர்களில் ஒருவர். அவற்றைப் பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை.

எண்ணிலடங்காப் பெண்கள், அவர்களுக்கு நடந்தவற்றை ஒப்புக்கொண்ட போதுதான், எனக்கு நடந்தது ஒரு கடலின் சிறு துளி என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அதற்கு முன்புவரை, என்னுடைய வலியை யாரும் உணர்ந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். ஏனெனில், நான் ஒன்றுமில்லாதவள் என்று பலமுறை என்னிடம் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஹார்வியால். இந்த ஒன்றுமில்லதவளுக்கு ஒரு வாய்ப்பு, அதுவும் ஹாலிவுட்டில் என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஒரு மெக்ஸிகன் நடிகையால் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடியாது என்ற பொதுப்புத்தியில் இருந்து உடைபட்டு நான் சில படங்களில் வேலை பார்த்தேன்.

அதற்கான வலிமையை எனக்கு கொடுத்த என்னுடைய ஹீரோ ஃப்ரீடா கலோதான். அசாத்தியமான வரைபடக்கலைஞர். அவருடைய வாழ்க்கையை படமாக்க நான் விரும்பினேன். அந்தக் காலத்தில் வின்ஸ்ட்டனுடைய கம்பெனிதான் இது போன்ற ரியாலிட்டியான படங்களை நிறைய தந்து கொண்டிருந்தது. வேறொரு கம்பெனியில் இருந்து அந்தப் படத்தை ஹார்வியின் நிறுவனத்துக்குக் கொடுத்தேன். எனக்கு ஒரு சிறிய கதாப்பாத்திரத்துக்கான பணத்துடன் பத்து சதவீதம் சம்பளமும், தயாரிப்பாளர் என்கிற க்ரெடிட்டும் கிடைப்பதாக இருந்தது. பெண் தயாரிப்பாளர்களுக்கு சம்பளம் என்பதெல்லாம் குதிரைக் கொம்பு. நான் பணத்தைப் பார்க்கவில்லை. ஹார்வியுடன் வேலை பார்ப்பதற்காக நான் மிகவும் உற்சாகமாயிருந்தேன். எனவே சரி என்று கூறினேன். ஆனால், அவருடன் வேலை பார்க்க நான் பல முடியாதுக்களை சொல்லவேண்டியிருந்தது. இரவு வேலைகளில் திடீரென கதவைத்தட்டுவதற்கும், அவருடன் உறவு கொள்வதற்கும். என் முடியாது வகையறா ஹார்வியை கோவப்படுத்தியது. அவர் முடியாது என்கிற வார்த்தைகளுக்குப் பழகி இருக்கவில்லை.ஹார்வி வின்ஸ்ட்டன்

எனவே, அந்தப்படத்தை கைவிடப் போவதாகக் கூறினார். நிறைய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அந்தக் கதையை மொத்தமாக மாற்ற வேண்டும், நான்கு சிறிய காதாப்பாத்திரங்களுக்கு முன்னணி நடிகர்களை அமர்த்த வேண்டும் ஆகிய முடியவே முடியாத கோரிக்கைகளுடன் படத்தைச் செய்ய ஒப்புக்கொண்டார். என்னுடைய நண்பர்கள் என்னுடன் நின்றார்கள். நான் அனைத்தையும் செய்து முடித்த போது, ஹார்வி என்னை பாலியல் ரீதியாக சீண்டுவதை நிறுத்திவிட்டு, அதனைத் தாண்டிய பிரச்சனைகளை என் மீது குவித்தார்.

என்னை கொன்றுவிடுவேன் என்றெல்லாம் கூட மிரட்டி இருக்கிறார். ஒரு முறை படத்தில் என்னுடைய நடிப்பு கேவலமாக இருப்பதாகவும், என்னுடைய கதாப்பத்திரத்திற்கு நான் பொருத்தமானவள் இல்லை என்றும் கூறினார். மீண்டும் பெரிய பிரச்சனை நடந்து, ஃபாரிடாவின் கதாப்பாத்திரத்திற்கும் எனக்கும் இடையில் ‘செக்ஸ்’ காட்சி வைக்க வேண்டும் என்றார். வேறு வழி இல்லாமல் நான் ஒப்புக்கொண்டேன். அன்றைக்கு படப்பிடிப்பின் போது அழுதுத் தீர்த்தேன். அந்த மாதிரியான காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஹார்விக்காக செய்கிறேன் என்று தான். ஆனால், அங்கிருக்கும் யாருக்கும் என்னுடைய கதை தெரியாது என்பதால் அவர்களால் நான் எதற்கு அழுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

மருந்துகளை உட்கொண்டு அந்த சீனை நடித்து முடித்தேன். படம் முடிந்ததும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் அளவிற்கு அது இல்லை என்று ஹார்வி சொன்னார். எனவே, ஒரு டெஸ்ட் ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். டெஸ்ட் ரிலீஸில் 80% மார்க் எடுக்கிறதா என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். 10 சதவீதத்திற்கும் கீழான படங்கள்தான் டெஸ்ட் ஸ்கீரினில் அப்படியான ஒரு மார்க்கினைப் பெறும். எங்களுடைய படம் 85% மதிப்பெண்ணைப் பெற்றது. அப்படி இருந்தும் ஹார்வி சமாதானம் அடையவில்லை.  அப்போதுதான் என்னுடைய தோழி எனக்கு ஆதரவாக நின்றார். அவருடைய கணவரை ஹார்வி மிரட்டினார். ஒரு கட்டத்திற்கு மேல், விளம்பரம் இல்லாமல் படத்தை வெளியிட்டோம்.

அதுவரை பெரிதாக கவனிக்கப்படாத ஃப்ரிடா என்கிற கலைஞர் உலகத்தாரால் உணரப்பட்டார்.

ஃப்ரிடா இரண்டு ஆஸ்கர்களை வாங்கிக்கொடுத்தது. இன்னும் பல விருதுகளை வாங்கிக்கொடுத்தது. சில வருடங்களுக்கு பின்பு, ஹார்வி என்னிடம் “நீ அந்தப் படத்தில் சிறப்பாக வேலை பார்த்தாய். நாம் சிறப்பானதொரு படம் செய்தோம்” என்றார். அவருடைய அந்த வார்த்தைகள் என்னை எந்த அளவிற்கு ஆழமாக சந்தோஷப்படுத்தியது என்று அவருக்குத் தெரியாது. அவருடைய செயல் எந்த அளவிற்கு என்னைக் காயப்படுத்தின என்பதும் அவருக்குத் தெரியாது. அதன் பின் ஹார்வியைப் பார்க்கும் போதெல்லாம், எங்களுக்குள் நடைபெற்ற கசப்பானவற்றை மறந்துவிட்டு, நல்ல நிகழ்வுகளை மட்டும் நினைத்துக் கொள்வேன்.

பெண்ணாகப் பல இடங்களில் எங்களுடைய மரியாதையைக் காப்பாற்ற நாங்கள் ஏன் போராட வேண்டும்? பெண் ரசிகைகள் எந்தப் படங்களைப் பார்க்க விரும்புவார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே சினிமா துறை விரும்பாமல் போனது என்று நினைக்கிறேன்.

ஒரு சர்வேயில் 2007 - 2016 ஆம் ஆண்டிற்குள் 4% மட்டுமே பெண் இயக்குநர்கள் மட்டுமே படங்களை இயக்கியிருக்கிறார்கள். அதிலும் 80% பேர் ஒரே ஒரு படம் மட்டுமே செய்ய வாய்ப்பு பெற்றவர்கள். ஒவ்வொரு படத்திலும் 27% தான் பெண்கள் பேசும் டயலாக்குகளாக வருகிறது. எங்களுடைய சிக்கலுக்காக எங்களுடன் நின்றவர்களுக்கு நன்றி. எங்கள் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விட முடியும் என்ற தைரியத்தில் ஆண்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். இனி அவர்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி எங்களால் பேசவும் முடியும்!


டிரெண்டிங் @ விகடன்