வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (16/12/2017)

கடைசி தொடர்பு:10:30 (16/12/2017)

இந்தோனேஷியாவில் வலிமைவாய்ந்த நிலநடுக்கம்: இரண்டு பேர் பலி?

இந்தோனேஷியாவில், இன்று அதிகாலை ஏற்பட்ட வலிமைவாய்ந்த நிலநடுக்கத்தால் இரண்டு பேர் பலியாகி உள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில், நேற்று நள்ளிரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 6.5 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் கிபாத்துஜா மாகாணத்தில் உருவான நில அதிர்வு, மேற்கு ஜாவா வரை எதிரொலித்துள்ளது. அமெரிக்க புவியியல் சர்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், சுமார் 57 மைல் ஆழத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கட்டடங்கள் அதிர்ந்தும் சில இடங்களில் சரிந்தும் உள்ளன. இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை நள்ளிரவில் விடுக்கப்பட்டாலும், அதிகாலையில் அது திரும்பப்பெறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், ஜாவா பகுதியில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால், இதுவரை இந்தோனேஷியா அரசின் சார்பில் நிலநடுக்க பாதிப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.