வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (20/12/2017)

கடைசி தொடர்பு:15:10 (20/12/2017)

அமெரிக்கா to கனடா: படையெடுக்கும் இந்தியப் பொறியாளர்கள்

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான கெடுபிடிகள் அதிகரித்திருப்பதை அடுத்து இந்திய மென் பொறியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு அமெரிக்காவாழ் பொறியாளர்கள் தற்போது கனடா நாட்டுக்குப் புலம் பெயரத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கா- கனடா

அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவி வகித்துவந்தபோது, ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலைபார்ப்பவர்கள், தங்களது வாழ்க்கைத்துணைக்கும் அமெரிக்காவில் வேலைதேடிப் பெற்றுக்கொள்ளலாம் என்ற சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சலுகை மூலம் அமெரிக்காவில் வேலைபார்ப்பவர்கள், தங்களது வாழ்க்கைத்துணைக்கும் வேலை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், ஒபாமாவின் அத்தனை சலுகைத் திட்டங்களும் ரத்துசெய்யப்பட்டுவருகின்றன.

இவ்வாறு வெளிநாட்டு மென் பொறியாளர்களுக்கு அமெரிக்காவில் நாளுக்கு நாள் கெடுபிடிகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், தற்போது அவர்களின் கவனம் கனடா பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக, இந்திய மென் பொறியாளர்கள் கனடாவில் வேலை தேடத் தொடங்கியுள்ளனர். கனடாவும் இந்த நெருக்கடி சூழலில் வெளிநாட்டு மக்களுக்கு சாதகமாகப் பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து வருகிறது. கனடாவில் மென் பொறியாளர்களுக்கு விரைவு விசாவும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.