கம்யூனிஸ்ட்களிடம் அடிபணிந்த சீன இராணுவம்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் : பகுதி 5 | Xi Jinping demands loyalty from PLA

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (20/12/2017)

கடைசி தொடர்பு:17:15 (20/12/2017)

கம்யூனிஸ்ட்களிடம் அடிபணிந்த சீன இராணுவம்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் : பகுதி 5


ரும் 2050-ம் ஆண்டுக்குள் சீனாவை உலகின் வல்லராசாக்க வேண்டும் என நினைக்கும் அந்நாட்டு அதிபர் ஜின்பிங், தனது நாட்டு ராணுவத்திடம் எதிர்பார்ப்பது இரண்டே இரண்டு விஷயங்கள்தான். ஒன்று, கம்யூனிஸ்ட் கட்சிக்கு கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசமாக இருப்பது மற்றொன்று  நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு உலகத் தரம் வாய்ந்த ராணுவமாக திகழ வேண்டும் என்பதுதான். 

அது 2015-ம் ஆண்டு. மங்கோலியாவில் உள்ள ஜூரிஹீ என்ற இடத்தில் அமைந்துள்ள சீன ராணுவ தளம். சீன ராணுவ வீரர்கள் இரண்டு படையணியினராக பிரிக்கப்பட்டிருந்தனர். ஒரு வார  காலம் நடந்த பயிற்சியில் இரண்டு படை அணியினரும் தங்களுக்கு இடையே மோதல் ஒத்திகையை அரங்கேற்றினர். இரண்டு அணிகளுக்குமே நவீன ஆயுதங்களும், கவச வாகனங்களும் அளிக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு அணி சீன ராணுவத்தின் வழக்கமான PLA ( people's Liberation Army ) எனப்படும் செஞ்சேனை அல்லது மக்கள் விடுதலை ராணுவம். மற்றொரு அணி ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட OPFOR ( The Blue opposing forces brigade ) எனப்படும் நீலப் படையணி. இந்த அணியினர் அமெரிக்க ராணுவப் பாணியில் போரிடும் வல்லமைப்படைத்தவர்கள். அதாவது, எதிர்காலத்தில் அமெரிக்காவை எதிர்த்துப் போரிடும் நிலைமை வந்தால் அதனைச் சமாளிக்கும் வகையில் பயிற்சி கொடுக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டது இந்த நீலப் படையணி.  


நீலப்படை 

இந்த நிலையில் இந்த இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற பயிற்சி மோதலில் செஞ்சேனையினர் தோற்கடிக்கப்பட்டனர். " மோதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே நாங்கள் விமானத் தாக்குதலுக்கு உள்ளானோம். எதிரிப்  படையின் செயற்கைக் கோள் எங்களை உளவு பார்த்தது. கூடவே எங்கள் கணினிகள் சைபர் தாக்குதலுக்கும் உள்ளானது.... வெளிப்படையாக சொல்வதானால், தாக்குதல் இந்த அளவுக்கு கடுமையாக இருக்கும் என நான் நினைத்தே பார்க்கவில்லை. நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்றுதான் முதலில் நினைத்தோம். உண்மையான தரத்திலான போர் பயிற்சியை நாங்கள் எடுத்துக்கொள்ளாததே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது" என்று விசும்பியபடியே சொன்னார் செஞ்சேனை தளபதியான  வாங் ஜிகியாங். இது, இந்த மோதல் கதையின் ஒரு அத்தியாம்தான். கடந்த 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளுக்கு இடையே இவ்விரு அணிகளுக்கும் இடையே வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மோதலில் நீலப்படையணி 32 முறை வெற்றிபெற்று, ஒரே ஒரு முறை மட்டுமே செஞ்சேனை அணியிடம் தோல்வியடைந்தது. 

செஞ்சேனை அணியின் இந்த மோசமான தோல்வியைக் கண்டபின்னரே அதிபரும் ராணுவ தலைமை கமாண்டருமான  ஜின்பிங், சீன ராணுவத்தை ஒட்டுமொத்தமாக சீரமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். உலகின் மிகப்பெரிய ராணுவமாக சீன ராணுவம் திகழ்ந்தாலும் அது அடுத்த முப்பதாண்டுகளுக்குள் உலகத்தரம் வாய்ந்த சிறந்த போர் படையாக உருவெடுக்க வேண்டும் என்பதில் ஜின்பிங் தீவிரமாக உள்ளார். அந்த எண்ணத்துடன்தான் , 2015 செப்டம்பர் மாதம், ராணுவத்தை முற்றிலும் சீரமைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்   ஜின்பிங். 3 லட்சம் துருப்புகள் குறைப்பு,  அமெரிக்க பாணியில் ராணுவ - சிவிலியன் ஒருங்கிணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் ஜின்பிங். இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது மாநாட்டில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய ஜின்பிங், சீன ராணுவத்துக்கு மூன்று இலக்குகளை வெளியிட்டார்: 2020 -க்குள், ராணுவத்தின் அடிப்படை விஷயங்களை இயந்திரமயமாக்கி, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைதல் மற்றும் வியூக திறனை மேம்படுத்திக்கொள்ளுதல், 2035-க்குள் ராணுவத்தை நவீன பாதுகாப்புப் படையாக மாற்றுதல், 2050-க்குள் உலகத் தரம் வாய்ந்த ராணுவமாக உருவாகுதல். 

சீன ராணுவத்தை சீர்திருத்த வேண்டும் என ஜின் விரும்புவதற்கு சொல்லப்படும் காரணங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று,  அமெரிக்க ராணுவம் உட்பட எந்த ஒரு உலக நாட்டு ராணுவத்துடனும் போரிட்டு வெல்லக்கூடிய அளவுக்கு சீன ராணுவத்தை சர்வதேச தரத்துக்கு நவீனமயமாக்குவது. இரண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரத்தை தன்னிடம் குவித்துக் கொள்வது. இருப்பினும் ஜின்பிங்கின் சீன ராணுவ சீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிபெறுவது என்பது, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அவரது அதிகாரம் எந்த அளவுக்கு உச்சம் பெறுகிறது என்பதைப் பொறுத்து அமையும். கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாட்டில் ஜின்பிங் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்து வெளிப்பட்டபோதிலும், கட்சியில் செல்வாக்குமிக்க போட்டிக் குழுவான ஜியாங் ஜெமின் தலைமையிலான அணியினரிடமிருந்து ஜின்பிங்குக்கு இன்னமும் எதிர்ப்பு தொடரத்தான் செய்கிறது.  இதுதவிர ஜின்பிங் மேற்கொண்ட ஊழல் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு அதிருப்திக்குள்ளான கட்சியின் உயர்மட்ட பதவிகளில் இருந்த 64 பேர்களில் பெரும்பாலானோர் ஜியாங் அணியினருடன் கைகோத்து உள்ளனர். இது தவிர, ஜியாங் அணியில் சேராவிட்டாலும் ஜின்பிங் மீது அதிருப்தி கொண்ட மூத்த ராணுவ தலைவர்கள் பலர் இன்னமும் ஜின்பிங் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. 


 அமெரிக்க படைக்கு நிகராக...

 ஜின்பிங்கின் சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டுமானால் சீன ராணுவம் நவீன போர் படையாக உருவெடுக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( ஜிடிபி) 3.3 சதவீதத்தை ராணுவ பராமரிப்பு மற்றும் முன்னேற்ற செலவினங்களுக்காக ஒதுக்குகிறது. ( கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 611 பில்லியன் டாலர்களை ஒதுக்கியது ) 10 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள், 6,800 அணு ஆயுத போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான நவீன போர்த் தளவாடங்கள்,  13 லட்சம் வீரர்கள், உயர் தரத்திலான ராணுவப் பயிற்சி, இரண்டாம் உலகப் போரிலிருந்து உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போரில் பங்கேற்ற அனுபவம் என வலிமையுடன் திகழ்கிறது அமெரிக்க ராணுவம். 

இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்துக்கு ஈடாக சீன ராணுவத்தை தரம் உயர்த்த வேண்டுமானால் சீனாவும் தனது ராணுவச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ( கடந்த 2016-ம் ஆண்டில் 216 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.)  ஆனால், சீன ராணுவத்துக்கு ஆண்டு பட்ஜெட்டில் அந்த நாட்டின் ஜிடிபி-யில் 1.9 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. மற்ற வளர்ந்த நாடுகளின் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில் இது நிச்சயம் குறைவுதான் என சீன பாதுகாப்புத் துறை அமைச்சகமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில்தான், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 -ம் தேதியன்று ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் படையினர் மத்தியில் பேசிய ஜின்பிங், 2050-க்குள் சீன ராணுவம் உலகத்தரம் வாய்ந்த படையாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 

மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய ராணுவ கமிஷன் , சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைத் தூக்கிப்பிடிக்கும் வலிமை மிக்க ராணுவத்தை  உருவாக்கி உள்ளதாகவும், இது அரசு ராணுவத்தைக் ( மக்கள் விடுதலை ராணுவம் ) காட்டிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதே சமயம் 2020-க்குள் மக்கள் விடுதலை ராணுவம் முழு அளவில் இயந்திரமயமாக்கப்பட்டுவிடும் என்றும், 2050-க்குள் ஆயுதப்படைகளும் தேசிய ராணுவமும் முற்றிலும் நவீனமயமாகிவிடும் என்றும்  அவர் கூறினார். 

கம்யூனிஸ்ட் பிடியில் ராணுவம்

சீனாவின் ஆட்சியமைப்பில் வியப்பான விஷயங்களில்  ஒன்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று ஒரு ராணுவம்  இருப்பது. அதாவது அரசு ராணுவம், கட்சி ராணுவம் என்று இரண்டு பிரிவுகள். அரசின் வசமுள்ள தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு குறைவான அதிகாரங்கள்தான். கட்சி ராணுவத்துக்குத்தான் அதிக அதிகாரம் மற்றும் செல்வாக்கு. இந்த ராணுவம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் மிகுந்த விசுவாசமாக இருக்கும். அதிபர் ஜின்பிங் எதிர்பார்ப்பதும் அதையேத்தான். அதே சமயம், மக்கள் விடுதலை ராணுவத்தினர் கட்சி ராணுவத்துக்கு விசுவாசமாகவும், கீழ்ப்படிந்தும் நடக்க வேண்டும் என்றும் ஜின்பிங் வலியுறுத்தி உள்ளார். 

சீனாவைப் பொறுத்தமட்டில் ராணுவம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவரிடம்தான் உண்மையான அதிகாரம்  இருக்கும். இதற்கு கடந்த கால சிறந்த உதாரணமாக  சீனாவின் மாபெரும் தலைவர்களாக போற்றப்படும் மாவோ மற்றும் டெங் ஜியோ  பிங் ஆகியோரைக் குறிப்பிடலாம். மாவோவைப் பொறுத்தவரை இறக்கும் வரை அவர்தான் ராணுவத் தலைவராக  இருந்தார்.

டெங்கைப் பொறுத்தவரை அவருக்கு அடுத்து பதவிக்கு வர உள்ளவராக ஜியாங் ஜெமின் தேர்ந்தெடுக்கப்பட்ட  பின்னர் ஓராண்டு கழித்து, அதாவது 1990-ம் ஆண்டு ராணுவத் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தார். ஆனால் ஜியாங்,  ராணுவத் தலைவர் பதவியின் அதிகாரத்தையும் மதிப்பையும் உணர்ந்திருந்ததால், தனக்கு அடுத்து பதவியேற்க இருப்பவர்  ஹூ ஜின்டாவோதான் என்று நிச்சயமான நிலையிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய  இரண்டாண்டுகள் வரை ராணுவத் தலைவர் பதவியைக் கைவிடவில்லை.அடுத்ததாக ஹூ ஜின்டாவோ கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் நேரம் வந்தபோது, ஜியாங்கைப்  போன்றே ராணுவத்தின் மத்திய கமிஷன் தலைவர் பதவியை ஜின்டோவோ தன்னிடமே வைத்திருப்பார் என்று சீன  மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அனைத்து பதவிகளிலிருந்தும் விலகி மக்களை  ஆச்சரியப்படுத்தினார். ஜின்டாவோவின் இந்த முடிவை ஒரு நல்ல அரசியல் முன்னேற்றத்துக்கான அறிகுறி என்றும், இது சீராக  வரையறுக்கப்பட்ட ஒரு அதிகார மாற்றத்துக்கான நடவடிக்கை என்றும் பலரும் பாராட்டினார்கள். 

ஆனால் இப்போதைய அதிபரும் ராணுவத் தலைவருமான ஜின்பிங்கோ ' நான் வேற மாதிரி' என்று சொல்லுகிற மாதிரி, சீனாவை புத்தாக்கம் செய்ய வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றிட தனக்கு பத்தாண்டு  அதிகாரம்கூட போதாது என்று சொல்கிறார். ஜின்பிங்கின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தின்போது ராணுவத்தைத்  தேசியமாக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டபோது அதை அவர் முற்றிலும் நிராகரித்தார். ராணுவத்  தலைமைப் பதவி கம்யூனிஸ்ட் கட்சியிடம்தான் இருக்க வேண்டும் என்றும், ராணுவம் கட்சிக்கு விசுவாசமாக  இருப்பதோடு, கட்சியிடமிருந்து வரும் உத்தரவை மட்டுமே ஏற்று அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் ஜின்பிங்  திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

" ஜின்பிங் தற்போது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், சீன அதிபர் ஆகியவற்றுடன் தேச பாதுகாப்பு கமிஷன் மற்றும்  ராணுவத்தின் மத்திய கமிஷன் ஆகியவற்றின் தலைவராகவும் உள்ளார். ராணுவம் மற்றும் காவல்துறை ஆகியவற்றைக்  கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஜின்பிங் வைத்திருக்கும் வரை அவர் தொடர்ந்து சீனா மட்டுமல்லாது உலக அளவிலும்  வலிமைமிக்கத் தலைவராக  நீடிப்பார்" என்கிறார் ஹாங்காங்கில் உள்ள சீன பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் வில்லி லேம். 

தொடரும்...

=====================================================================================================

சீனாவின் கறுப்பு அத்தியாயம் 

சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளும் அரசியல் கொள்கைகளும் தோற்றுப்போய்விட்டதாக கூறி 1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 -ம் தேதி அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. தலைநகர்  பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தங்கள் கோரி இப்போராட்டத்தை நடத்தினர். 
இப்போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றபோதிலும், மாணவர்களும் கல்வியாளர்களுமே  பெருமளவில் திரண்டனர். மாணவர்களின் இந்த எழுச்சியைப் பார்த்து அப்போதைய கம்யூனிஸ அரசு மிரண்டுபோனது.

தியான்மென் சதுக்கப் போராட்டம்

தியான்மென் சதுக்கத்தில் மட்டுமல்லாது ஷாங்காய் போன்ற பல்வேறு சீன நகரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தின் ஒரு அம்சமாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் மே 13-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினர். இதனையடுத்து 19-ம் தேதியன்று கட்சித் தலைவர்கள் மாணவர்களைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மாணவர்கள் எதிரபார்த்திருந்த நிலையில், ராணுவச் சட்டத்தைப் பிறப்பித்து போராட்டக்காரர்களை ஒடுக்க பீரங்கிகளில் ராணுவத்தை அனுப்பி வைத்தது அரசு. 
இதனால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது. மாணவர்களுடன் இணைந்து மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடினர். ஆனாலும் அசைந்து கொடுக்காத அரசு, போராட்டக்காரர்களை ஒடுக்க ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அனுப்பி வைத்தது. பீரங்கிகளில் வந்த ராணுவத்தினர் கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மற்றும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுத்தள்ளியது. குண்டடிபட்டும், ராணுவ வாகனங்களில் நசுங்கியும் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.  

ராணுவத்தின் அடக்குமுறையால் ஜூன் 4 -ம் தேதியோடு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது அதிகாரபூர்வமாக தெரியவராத நிலையில், சீன அரசு ஆவணங்களின் படி 200 முதல் 300 பேர் வரை உயிரிழந்ததாகவும்,  நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்ட தகவலின்படி 300 முதல் 800  பேர் வரையிலும், சீன மாணவர்களின் சங்கங்களின் படி 2,000 முதல் 3,000 பேர் வரையிலும் உயிரிழந்ததாக தகவல்கள் உள்ளன.  

இந்த வன்முறைக்கு பிறகு போராட்டத்தில் தொடர்புடைய ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, சிறையில் சித்ரவதை செய்ததாகவும், நியாயமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு பலருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.  ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. சீன அரசின் கறுப்பு அத்தியாயமாக பார்க்கப்படும் இந்த வன்முறைக்கும் ஊடகம் மீதான தடை க்கும் பல்வேறு உலக நாடுகள் கண்டனம்  தெரிவித்தன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்