கொழும்பில் பிச்சையெடுக்கத் தடை! இலங்கை அரசு அதிரடி உத்தரவு | Sri Lanka bans begging in Colombo

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (20/12/2017)

கடைசி தொடர்பு:21:50 (20/12/2017)

கொழும்பில் பிச்சையெடுக்கத் தடை! இலங்கை அரசு அதிரடி உத்தரவு

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிச்சையெடுக்கத் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கையின் நகர்ப்புற மற்றும் மேற்கத்திய வளர்ச்சித்துறை அமைச்சர் சம்பிகா ரணவாகா கூறுகையில், ‘கொழும்பு நகரச் சாலைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்களில் 2018-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிச்சையெடுக்கத் தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கணக்கில்கொண்டு கொழும்பு நகருக்குள்ளும், நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வரும் ஒன்றாம் தேதி முதல் பிச்சையெடுப்பது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்படுகிறது’ என்றார். 

இதுதொடர்பாக இலங்கை அரசு நடத்திய கணக்கெடுப்பில் கொழும்பு நகரில் மட்டும் 600 பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும் அமைச்சர் ரணவாகா தெரிவித்தார். ‘பிச்சைக்காரர்கள் அனைவரும் அரசு கட்டியுள்ள மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பப்படுவார்கள். முதலில் பிச்சைக்காரர்களிடம் அரசு மென்மையாக நடந்துகொள்ளும். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தரும். ஆனால், பிச்சையெடுப்பதையே தொழிலாக வைத்திருப்பவர்கள் உடனடியாக வேறு வேலைக்குத் திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்த சிறுவர்கள் விரைவில் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்’ என்றும் அமைச்சர் ரணவாகா தெரிவித்துள்ளார்.