வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/12/2017)

கடைசி தொடர்பு:08:54 (21/12/2017)

அமெரிக்காவில் புதிய வரிச் சீர்திருத்தம்... வரலாற்று முக்கியத்துவ வெற்றி என ட்ரம்ப் புகழாரம்!

அமெரிக்காவில், டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது அமெரிக்காவில் அமலில் இருக்கும் வரி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, `நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த வரி சீர்திருத்தத்தால், பெரும் நிதிச் சுமை தவிர்க்கப்படும்' என்று கூறி வரவேற்றிருக்கும் நிலையில், `இது ஒரு மிகப் பெரும் வரி ஊழல்' என்று ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

ட்ரம்ப்

இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டு சபைகளிலும் இந்தப் புதிய வரி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ட்ரம்ப் கையெழுத்திட்ட பிறகு, இந்தச் சட்டம் சீக்கிரமே அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ட்ரம்ப், `நடுத்தரக் குடும்பத்தினருக்கு மிகப் பெரும் வரி வெட்டை அமல்படுத்துவேன் என்று நான் முன்னரே கூறியிருந்தேன். இன்று அது நிறைவேறியுள்ளது. இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியாகும். இந்தப் புதிய வரி முறையால், நம் நாட்டிலிருந்து வெளியேறிய நிறுவனங்கள் மீண்டும் இங்கு வரப்போகின்றன. அப்படி வந்தால், இங்கு வேலைவாய்ப்பு அதிகமாகும்' என்று பேசியுள்ளார்.