வெளியிடப்பட்ட நேரம்: 02:53 (22/12/2017)

கடைசி தொடர்பு:02:53 (22/12/2017)

காடுகளைக் காக்கும் குழுவுக்குப் பரிசு "மரணம்"... இது அரசாங்க அடக்குமுறை!

தூரத்தில் அந்தச் சத்தம் கேட்கவும், அவர்கள் அமைதியாகப் பதுங்குகிறார்கள். அந்தக் கூட்டத்தின் தலைவன் அவர்களிடம் சைகையில் ஏதோ சொல்கிறான். தற்போது அவர்கள் இன்னும் ஜாக்கிரதையாக, மிகவும் மெதுவாகப் படர்ந்து, பிரிந்து பதுங்கியபடியே நடக்கிறார்கள். சில நிமிடங்கள் கழிந்திருக்கும். காய்ந்த சருகுகளின் மீது கால்களை வைக்கும்போது, சத்தம் ஏற்படாதவாறு அடிமேல் அடி வைத்து நடக்கிறார்கள். அவர்கள் பிரிந்து நடப்பதை ஒரு மரத்தின் மீதிலிருந்து பார்த்தோமானால் அவர்கள் கிட்டத்தட்ட அரைவட்ட வடிவில் நகர்கிறார்கள் என்பது புரியும். அது ஒரு வித வியூகம். 

காடு - பிலிப்பைன்ஸ்

தற்போது அந்தச் சத்தம் மிக நெருக்கத்தில் கேட்கிறது. அந்தச் சத்தத்தை உற்றுக் கேட்டால், அது பெரிய ரம்பத்தை வைத்து ஒரு பெரும் மரத்தை அறுக்கும் சத்தம் என்பதை எளிதாக உணரலாம். அந்தக் கூர்மையான ரம்பம், உறுதியான அந்த மரப்பட்டைகளை உடைத்து நொறுக்க வீரியமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 

அந்தத் தலைவன் காட்டிய சைகையின் காரணமாக அனைவரும் அமைதியாக நிற்கிறார்கள். மூச்சின் சத்தம் அதிகம் வெளி கேட்காதவாறு மூச்சினை மெதுவாக இழுத்து விடுகிறார்கள். இதோ...இப்போது அந்தத் தலைவன் கண்களைக் காட்டிவிட்டு, வேகமாக எழுந்து ஓடத் தொடங்குகிறான்.

"நிறுத்துங்கள்... மண்ணில் மண்டியிட்டு கைகளைத் தூக்குங்கள்" என்று கத்தியவாறே அந்த மரத்தை அறுத்துக்கொண்டிருக்கும் கொள்ளையர்களை நோக்கி ஓடுகிறான் அந்தத் தலைவன். அந்தத் தலைவனின் பெயர் "எஃப்ரன் டாடா பல்லாடெரஸ்". சுருக்கமாக டாடா.

"நாங்கள் பலவான் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இது மரங்கள் அறுக்கத் தடை செய்யப்பட்ட பகுதி. உங்களிடம் என்ன உரிமம் இருக்கிறது?யார் நீங்கள்? எதன் அடிப்படையில் இங்கு மரம் வெட்டுகிறீர்கள்?" என தொடர் கேள்விகளைக் கேட்கிறார்.

காடு - பிலிப்பைன்ஸ்

அவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. அங்கிருக்கும் அந்த மர அறுப்பு இயந்திரங்களைக் கைப்பற்றுகிறார்கள். அவர்களையும் அழைத்துச் சென்று போலீஸிடம் ஒப்படைக்கிறார்கள்.

இதெல்லாம் நடப்பது பிலிப்பைன்ஸ் நாட்டின் பலவான் தீவுப் பகுதியின் செழிப்பான மழைக்காடுகளில்தான். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொடர் சுரண்டல்களுக்கும், அரசு மற்றும் அதிகாரிகளின் ஊழலுக்கும் பிலிப்பைன்ஸ் தன் இயற்கை வளங்களைப் பெரிதளவில் பலி கொடுத்துள்ளது. அங்கு இன்று மிச்சமிருப்பது இந்த பலவான் தீவின் காடுகள் மட்டுமே. அதையும் அழிக்க பல நிறுவனங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. எத்தனையோ முறை அரசாங்கத்திடம் முறையிட்டும், அது எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் அந்தப் பகுதி சூழலியலாளர்கள் ஒன்றிணைந்து Palawan NGO Network (PNNI) எனும் அமைப்பைத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் அமைப்பின் தன்னார்வலர்களைக் கொண்டு ஒரு தனிப் பாதுகாப்பு படையைத் தொடங்கி, அவர்கள் மூலம் மிச்சமிருக்கும் காடுகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

காடு - பிலிப்பைன்ஸ்

இந்த அமைப்புத் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 700ற்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களை இந்தப் பாதுகாப்புக் குழுவினர் தடுத்துள்ளனர். ஆனால், இதற்கு இவர்கள் கொடுத்த விலை பல உயிர்கள். இந்த 20 ஆண்டுகளில் இவர்கள் பல போராளிகளை இழந்துள்ளனர். எந்தவித பாதுகாப்பு ஆயுதங்களும் இல்லாமல், கொள்ளையர்களை இவர்கள் தடுக்க முயலும் போது, பல ஆயுதங்களோடு இருக்கும் கொள்ளையர்கள் மிக எளிதாக இவர்களைக் கொன்றுவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் இந்தப் போராட்டத்தையே கைவிட்டுவிடலாமா என்ற எண்ணம் கூட எழுந்ததாக இந்தக் குழுவினர் சொல்கிறார்கள். இருந்தும்.. மண்ணைக் காக்க தொடர்ந்துப் போராடி வருகிறார்கள்.

காடு - பிலிப்பைன்ஸ்

கிறிஸ்துமஸ் நெருங்கும் இந்த நேரத்தில், தங்களின் அலுவலகத்தின் வாயிலில், தாங்கள் இதுவரை கைப்பற்றியிருக்கும் இயந்திர ரம்பங்களைக் கொண்டு ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அது பிலிப்பைன்ஸ் காடுகளின் அழிவை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 

காடி - பிலிப்பைன்ஸ்

ஒரு பக்கம் போராளிகளின் கொலை, அரசாங்கத்தின் மெத்தனம், அரசு அதிகாரிகளின் ஊழல், கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் சதிகள் என எல்லாவற்றையும் கடந்து இவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். போராட்டங்கள் சற்று தளர்ந்தாலும், போராளிகள் ஒருபோதும் தளருவதில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்