வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (22/12/2017)

கடைசி தொடர்பு:20:03 (22/12/2017)

24 வருடங்களுக்கு முன்பு உருவான கருவிலிருந்து பிறந்த குழந்தை! - மகிழ்ச்சியில் அமெரிக்க தம்பதியர்

கரு

(Photo Courtesy: CBS News)

மெரிக்காவின் டென்னசி (Tennesse) மாநிலந்தைச் சேர்ந்தவர்கள், டினா கிப்சன் (Tina Gibson) மற்றும் பெஞ்சமின் கிப்சன் (Benjamin Gibson). இந்தத் தம்பதிக்கு நவம்பர் 25-ம் தேதி பிறந்த பெண் குழந்தை, வித்தியாசமான உலக சாதனை படைத்துள்ளது. உலகிலேயே மிகப் பழைமையான கருவிலிருந்து பிறந்த குழந்தை என்பதுதான் அது. கிட்டதட்ட 24 வருடங்களாகப் பாதுகாக்கப்பட்ட கருவை, 2016-ம் ஆண்டில் டினாவுக்குச் செலுத்தினார்கள். அப்போதே, 'இந்தக் கரு உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது' என்றார், அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர். டினா அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களுக்குத் தேவை ஒரு குழந்தை. 

டினா கிம்சனும் பெஞ்சமின் கிம்சனும் ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டபோதே, தான் சாதாரணமாக கர்ப்பம் தரிக்க முடியாது என்பதை அறிந்திருந்தார் டினா. ஏனெனில், பெஞ்சமின் 'cystic fibrosis' என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் குழந்தை பெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். இருவரும் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உதவி செய்துகொண்டிந்தனர். 

கருஒருமுறை அவர்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். அதற்குமுன்பாக, தன் பிறந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார் டினாவிடம், கரு தத்தெடுப்பு (Embryo adoption) பற்றிக் கூறினார் அவரின் அப்பா. அதைக் கேட்ட டினா, 'நாங்கள் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உதவி செய்வதிலேயே ஆர்வமாக இருக்கிறோம்' என்று கூறிவிட்டார். ஆனால், சுற்றுலாப் பயணம் முழுவதும், அப்பா சொன்ன விஷயமே திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. தன்னால் கர்ப்பமாக முடியும் என்ற நம்பிக்கை உருவானது. சுற்றுலா முடிந்து வந்ததும், தேசிய கரு தானம் மையத்தைத் தொடர்புகொண்டு பேசினார் டினா. விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்து சமர்ப்பித்தார். 

எந்த மாதிரியான கருவை கர்ப்பப்பையில் செலுத்த வேண்டும் என்பதற்கு 300 விதமான கருக்களின் விவரங்களை ஆராய்ந்து முடிவுசெய்தனர் இந்தத் தம்பதியர். இதுகுறித்து கூறுகையில், 'நாங்கள் இருவருமே சற்றே குள்ளமாக இருப்பவர்கள். அதனால், எங்களுக்குப் பிறக்கும் குழந்தை நல்ல உடல்வாகு, உயரத்துடன் இருக்க  வேண்டும் என நினைத்தோம். ஆனால், இந்தக் குழந்தை உலக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை' என்கிறார் பெஞ்சமின் உற்சாகமாக. 

டினாவின் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்ட கரு, 1992 அக்டோபர் 14-ம் தேதி பாதுகாக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் கர்ப்பமான டினா, நவம்பர் 25-ம் தேதி, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். 2.7 கிலோ எடையுடன் பிறந்த அந்தக் குழந்தைக்கு, ’எம்மா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். 

“இந்தக் கருவை என் கர்ப்பப்பையில் செலுத்தியபோது எனக்கு 25 வயது. ஒருவேளை இந்தக் கரு உருவானபோதே பிறந்திருந்தால், நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆகியிருப்போம். இந்த நிகழ்வை எல்லாரும் அறிவியல் என்று கூறுகிறார்கள். நான் இவளைக் கடவுள் எனக்கு அளித்த வரம் என்றே நினைக்கிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குக் கிடைத்த பரிசு இவள்' என நெகிழ்கிறார் டினா. 

இதேபோன்ற ஓர் உலக சாதனை 2011-ம் ஆண்டு நடந்துள்ளது. நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு பெண், 20 வருடங்கள் பாதுகாக்கப்பட்ட கருவிலிருந்து, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருந்தார். அந்தச் சாதனையை முறியடித்துள்ளது 'எம்மா' என்கிற இந்தக் குட்டி தேவதை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்