வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (25/12/2017)

கடைசி தொடர்பு:14:38 (25/12/2017)

2 லட்சம் ஏக்கர்களைக் காவுவாங்கிய கலிஃபோர்னியா காட்டுத்தீ... காரணம் யார்?

கலிஃபோர்னியாவின் காட்டுப் பகுதியில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் ஒரு காட்டுத்தீ கலிஃபோர்னியாவையே மிரள வைக்க முடியுமா..? ஆம், அங்கு ஏற்பட்ட காட்டுத்தீ ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையையும் திருப்பிப் போட்டிருக்கிறது. மக்கள் தனித்தனியாக பிரிந்து அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 8-ம் தேதி இரவு கலிஃபோர்னியாவின் வென்சுரா காட்டுப்பகுதியில் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் இரண்டு லட்சத்தைத் தொட்டிருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டடங்களும் எரிந்து சாம்பலாகிக்கொண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து அந்நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தண்ணீர் மற்றும் ரசாயன பொடிகளைத் துவி தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. கலிஃபோர்னியாவில் உள்ள ராட்சதக் காட்டுப்பகுதியில் ஆறுபிரிவுகளாகப் பிரிந்து அந்தப் பெருந்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அக்காட்டில் திடீரென தோன்றிய காட்டுத்தீ இவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என யாரும் அப்போது நினைத்திருக்க மாட்டார்கள் ஏனெனில் அங்கு காட்டுத்தீ அவ்வப்போது பரவிக்கொண்டுதான் இருக்கும். ஆனால், கடந்த டிசம்பர் 8-ம் தேதி கலிஃபோர்னியா காட்டுத்தீ கொடூரமாக 2 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் காவு வாங்கியது. 

கலிஃபோர்னியா காட்டுத்தீ

Credits - David McNew, Reuters

இதற்கு முன்னர், அக்டோபர் மாதம் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயே மிகப்பெரிய அளவில் இருந்தது. அங்கு நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ பரவியது. இப்பகுதிகளில் திராட்சை பழங்கள் அதிக அளவில் விளையும். அதனால் அங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் இருக்கின்றன. இந்த ஒயின் தொழிற்சாலைகளால்தான் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவியது. இதுதவிர, இங்கு வறட்சியாலும், வீசிய பலத்த காற்றாலும் வனப்பகுதியில் தீ பிடித்தது. இந்தச் சேதம் முடிவதற்குள்ளரே அடுத்த காட்டுத்தீ மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கலிஃபோர்னியா காட்டுத்தீக்கு அடிக்கடி இரையானாலும், 2017-ம் ஆண்டின் முடிவில் ஏற்பட்ட இப்பாதிப்புதான் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த விபத்துகளிலேயே உச்சகட்ட கோரத் தீ விபத்து. 45 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேலான நிலப்பரப்பு தீப்பிழம்புகளாக காட்சியளிக்கிறது. அதேபோல ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பரவும் தீயானது தீப்பிழம்புகளாகவே பரவியது. இதனால்தான் அதிக சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும். கலிஃபோர்னியா காட்டுத்தீ பற்றி அமெரிக்காவில் ஒரேகான் பகுதியில் உள்ள கன்சர்வேஷன் பையோலஜி இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா சைபார்ட் மற்றும் அவரது சக ஊழியர்களால் ஒரு புதிய பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்குழு 1972 முதல் 2010 வரை அமெரிக்க காட்டுத்தீயை தூண்டிவிட்ட காரணிகளை ஆய்வு செய்தது. அக்குழு கண்டறிந்த முக்கியமான காரணிகளாக காலநிலை மற்றும் மனிதர்களின் நடவடிக்கையை முன் வைத்தது. 

 

இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீபன் டோர்ர் கலிஃபோர்னியா காட்டுத்தீ பற்றிய முக்கியமான ஆராய்ச்சிக் கருத்தை தெரிவித்துள்ளார். அதில், "கலிஃபோர்னியாவின் காட்டுமிராண்டித்தன தீவிபத்திற்கு காலநிலை ஒரு முக்கியமான காரணம். நீண்ட காலமாக நிலவும் வறட்சி மற்றும் வலுவான பருவகால காற்று என இரண்டின் மூலம்தான் இந்த ஆண்டு தீ விபத்து நடந்துள்ளது. இதனால் இந்த நெருப்பு எதிர்பாராமல் நடந்தது என்று சொல்ல முடியாது. மேலும் இவ்விபத்து அதிகமாவதற்கு மனிதர்களின் செயலும் முக்கியமானது. மனிதர்கள் காடுகளில் வளர்க்கும் பனை மரங்களிலிருந்து விழும் காய்ந்த ஓலைகள் மற்றும் சருகுகளால்தாம்  இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. காய்ந்த சருகுகள் ஏற்படுத்திய பாதிப்புகள்தாம் முக்கியமான காரணம். தீ விபத்து ஏற்பட்டபோது இந்தச் சருகுகள்தாம் அதிகமான தீ பரவ முக்கியக் காரணமாக இருந்தது" என்கிறார். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்த காட்டுத்தீயானது தொடர்ந்து இரண்டு வாரங்களாக எரிந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்